மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

‘யுத்த வலி’ பேசும் செக்கச்சிவந்த வானம்!

‘யுத்த வலி’ பேசும் செக்கச்சிவந்த வானம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள செக்கச்சிவந்த வானம் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படம் உருவாகிவருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கூட்டணியான மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷனில் இந்தப்படத்தின் பாடல்கள் அமைக்கப்படுவதால் ரசிகர்களிடம் இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது.

இந்தநிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 5) நடந்தது. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு . ‘மழைக்குருவி’ மற்றும் ‘பூமி பூமி’ எனத் தொடங்கும் அந்த இரண்டு பாடல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.

இதில் மழைக்குருவி எனும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார். பாடலின் சூழலையும் வரிகளையும் பார்க்கும்போது சிம்பு-டயானா எரப்பா இடையேயான காதல் பாடலாக இது இருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

பூமி பூமி எனும் மற்றொரு பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். ஹை பிட்ச்சில் பல இசைக்கருவிகளின் ஒலிச்சேர்க்கைகள் நிரம்ப வலம்வரும் இந்தப் பாடல் யுத்தத்தின் வலிகளை உணர்த்துவதாக உள்ளது. முன்னதாக வெளியாகியிருந்த ட்ரெய்லரின்படி பார்த்தால் இந்தப்பாடல் ஜோதிகாவின் பார்வையின்வழி விரியும் பாடலாக இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக வைரமுத்துவின் வரிகளில் இந்தப் பாடலில் அமைந்துள்ள

மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்...

இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

மற்றும்

கடலில் மீன் ஒண்ணு அழுதா..

கரைக்கு சேதி வந்து சேருமா?

போன்ற வரிகள் யுத்தத்தின் வீரியத்தையும் யுத்தத்தை நிறுத்தவேண்டியதன் அவசியத்தையும் கவித்துவமாக விவரிப்பதுபோல அமைந்துள்ளது.

இந்தப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon