மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கண்காணிக்கப்படும் ஜன் தன் கணக்குகள்!

கண்காணிக்கப்படும் ஜன் தன் கணக்குகள்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 9ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாதவையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஜன் தன் வங்கிக் கணக்குகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அப்போது ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தின் அளவு ரூ.45,600 கோடியாக இருந்தது. அதைத் தொடர்ந்த ஒரு வாரத்தில் 41 சதவிகித உயர்வுடன் டெபாசிட் தொகை ரூ.64,200 கோடியாக அதிகரித்துள்ளது. அதன் பின்னர் 2017 மார்ச் மாதத்தில் ரூ.63,000 கோடியாகக் குறைந்த டெபாசிட் தொகை மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் ஜன் தன் கணக்குகளில் முறைகேடாகப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஜன் தன் கணக்குகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு வங்கிகளின் 187 கிளைகளில் இருந்து மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு இது தொடர்பாகப் புகார்கள் வந்துள்ளதாக மத்திய நிதிச் சேவைகள் துறை செயலாளரான ஹஸ்முக் அதியா, பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இந்த டெபாசிட்கள் சட்டவிரோதமானவையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விவரங்கள் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடமிருந்து நிதிச் சேவைகள் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களின் விவரங்களுடன் டெபாசிட் தொகை விவரங்களைச் சரிபார்க்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon