மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

தன்பாலின உறவு குற்றமாகாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தன்பாலின உறவு குற்றமாகாது : உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு!

தன்பாலின உறவு குற்றமாகாது என்றும், இதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 பகுத்தறிவற்றது, ஒருதலைப்பட்சமானது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (செப்—6) தீர்ப்பு அளித்துள்ளது.

2009இல் டெல்லி உயர்நீதிமன்றம் தன்பாலின உறவை குற்றச்செயல் அல்ல என்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 2013இல் தன்பாலின உறவு குற்றச் செயல் எனத் தீர்ப்பளித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ன்படி தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்படும். இந்த தீர்ப்பை எதிர்த்து நாஸ் பவுண்டேசன் உள்ளிட்ட பல அரசு சாரா நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் 6 வழக்கு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் விசாரணையானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பானது, இன்று கூடிய தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் அமர்வினால் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி கூறுகையில், தன்பாலின உறவு குற்றமாகாது, இதைக் குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஆனது ஒருதலைப்பட்சமானது , எந்த விதத்திலும் அதை நியாயப்படுத்த முடியாது, அந்தப்பிரிவு பகுத்தறிவற்றது என்று தெரிவித்தார்.

இதற்கான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றம்தான் கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon