மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

டிஜிபி ராஜினாமா: தடுக்கும் முதல்வர்!

டிஜிபி ராஜினாமா: தடுக்கும் முதல்வர்!

குட்கா விவகாரம் தமிழக அரசையே ஆட்டுவிக்கும் அளவுக்குத் தீவிரம் அடைந்திருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ...டிஜிபியான டி.கே.ராஜேந்திரனின் வீடு, முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வீடு, மற்றும் உயர் அதிகாரிகள் வீடுகள் என்று தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் 35 இடங்களில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ நேற்று ரெய்டு நடத்தியது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே ரெய்டுகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ரெய்டையும் அவர் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தமிழகத்திலேயே முதன் முறையாக டிஜிபியின் வீடு ரெய்டுக்கு ஆளானது தமிழக காவல்துறைக்கு தேசிய அளவில் மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று இரவு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தமிழக முதல்வரை சந்தித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குட்கா நிறுவனம் ஒன்றில் சென்னையில் கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பின்னர் வருமான வரித்துறை சார்பில் 2016 ஆகஸ்டு 11 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும், காவல்துறை தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் குட்கா நிறுவனத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட

ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், வருமான வரித்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது.

வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. என்ன நடவடிக்கை என்றால், குட்கா ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்போதைய சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனை டிஜிபியாக பதவி உயர்வு அளித்து கௌரவப்படுத்தியது தமிழக அரசு.

இதன் பின்னர் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களும் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததும், வருமான வரித்துறை ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்லில் அப்போது அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளருக்கு ரூ. 89 கோடி தொகை செலவு செய்யப்பட்டு, இருந்ததாகவும், அது எந்தெந்த வகையில் யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. இதிலும் முதன்மையான குற்றச்சாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் எழுந்தது.

இதன் பின்னர் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அதை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வழக்கில் சிபிஐ 35 இடங்களில் நேற்று ரெய்டு நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. புலனாய்வு தொடரும் என்று தெரிவித்துள்ளது சிபிஐ.

இந்த நிலையில் ரெய்டுக்கு ஆளான டிஜிபி டி.கே. ராஜேந்திரன் நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்று கோட்டை மற்றும் ஐபிஎஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.

“சிபிஐ ரெய்டின் மூலம் மிகவும் அப்செட் ஆகியிருக்கிறார் டிஜிபி. உடனடியாக தமிழக முதல்வரை சந்தித்து தனக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியிலும் டிஜிபி அலுவலகத்திலும் ஏற்கனவே மரியாதை தேய்ந்து வருவதாகவும் இந்த ரெய்டுக்கு பின் தான் அலுவலகம் செல்ல முடியாது என்றும் புலம்பியிருக்கிறார். உடனடியான தனது ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்றும் டி.கே.ராஜேந்திரன் முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.

ஆனால் முதல்வர் இதை ஏற்கவில்லை. டிஜிபியான டி.கே.ராஜேந்திரன் பதவியை ராஜினாமா செய்தால் குட்கா விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்துவிடும். உடனடியாக அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்தால் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எல்லாரும் விசாரணைக்கு ஆளாக வேண்டி வரும். சீட்டுக் கட்டு போல அரசே சரியும். எனவே இப்போதைக்கு ராஜினாமா செய்ய வேண்டாம் என்று டிஜிபியிடம் வலியுறுத்தியிருக்கிறார். இதையடுத்து குழப்பத்தோடு திரும்பியிருக்கிறார் டிஜிபி” என்றார்கள்.

குட்கா விவகாரம் அரசை வேகமாக ஆட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon