மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

வாகன மாசுபாட்டைக் கண்டறிய சென்சார்!

வாகன மாசுபாட்டைக் கண்டறிய சென்சார்!

அதிகளவு மாசு ஏற்படுத்தும் வாகனங்களைக் கண்டறிய சென்சார் கருவி பொருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசுபாட்டினால் அதிகளவில் பாதிக்கப்படும் நகரங்களில் டெல்லி முன்னிலையில் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மாசுபாட்டைக் குறைப்பதற்காகச் சில நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, CNG எனப்படும் அழுத்தத்திற்கு உட்பட்ட இயற்கை எரிவாயு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சுற்றுச் சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், அதிகளவு மாசுபாட்டைக் குறைக்கும் H-CNG எரிபொருள் நடப்பு மாதத்தில் சோதனை செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, H-CNGஐ மாற்று எரிபொருளாகப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியவை கவனம் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த எரிபொருள் மூலம் கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற உமிழ்வுகள் 70 சதவிகித அளவிற்குக் குறைக்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, H-CNG எரிபொருளானது 50 பேருந்துகளில் சோதனை செய்யப்படும்.

சென்சார் கருவி

அதிகளவு மாசு ஏற்படுத்தும் வாகனங்களைக் கண்டறிய, அடுத்த மாதம் முதல் RFID எனப்படும் ரேடியோ அலைக்கற்றை அடையாளக் கருவி பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தை நிறுவ, சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு (EPCA) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லிக்குள் நுழையும் வாகனங்களின் மாசுபடுத்தும் அளவை, சென்சார் மூலம் இந்த தொழில்நுட்பம் கண்டறிந்து விடும். இதையடுத்து, அந்த வாகன உரிமையாளரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கருவியானது, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் வாகனங்களுக்குப் பொருத்தப்படும். இந்த முறை ஏற்கனவே சீனாவில் அமலில் உள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon