மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்!

இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்!

உலகிலேயே பெண் விமானிகள் அதிகமுள்ள நாடு இந்தியா என்றும், அவர்களின் எண்ணிக்கை சர்வதேசச் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்றும், ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதில் பெண் விமானிகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது. உலகப் பெண் விமானிகளில் 12 சதவிதத்தினர் இந்தியாவில் தான் உள்ளனர். போயிங் நிறுவனக் கருத்துக்கணிப்பின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 7 லட்சத்து 90 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்தியப் பெண் விமானிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்றும், விமானிகளுக்கான ஊதியத்தில் பாலினப் பாகுபாடு இல்லாததால் பெண்கள் அதிகளவில் இந்தப் பணியை விரும்பக் காரணம் என்றும் கூறப்படுகிறது. விமானிகள் ஊதியமானது பயிற்சி நேரம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. விமானிகளுக்கான படி உள்ளிட்ட தொடக்க நிலை ஊதியம் வணிக வழக்குகளுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் கட்டடக் கலை நிபுணர்களின் ஊதியத்துக்கு இணையாக உள்ளது. இதனால், அதிகமானோர் விமானிப் பணியில் விருப்பம் கொள்வது அதிகரித்து வருகிறது.

நிகர உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகிதம் அளவுக்கே பெண்களின் பங்களிப்பு உள்ள நிலையில், விமானத் துறையில் பெண் விமானிகளின் வருகை சர்வதேசச் சராசரியை விட அதிகரித்து வருவது ஆச்சரியமான வளர்ச்சி என்று கருதப்படுகிறது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon