மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ்!

ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ்!

ஒட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம், காப்பீடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டாக வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

சாலை விபத்துக்களைக் குறைக்கவும், விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்துத் துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை காகித வடிவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் போன்றவற்றை ஒருங்கிணைத்து ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும். ஸ்மார்ட் கார்டில் வாகனங்கள் குறித்த அனைத்துத் தகவல்கள் மட்டுமின்றி, அதன் உரிமையாளர் குறித்த முழு விவரங்களும் இடம்பெறும். ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டது குறித்த தகவல்களும் அதில் அடங்கும். வாகனங்களைப் புதுப்பிக்கும்போது இந்த கார்டினை கொண்டு சென்றால் போதும். கார்டிலுள்ள ‘சிப்’ மூலம் அந்த வாகனத்தின் ஆயுட்காலம், புதுப்பிக்க வேண்டிய காலம் போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறுகையில், “இந்த ஸ்மார்ட் கார்டில் ‘பார்கோடு’, புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும், போலீசாரும் ஆய்வு செய்யலாம். ‘பார்கோடினை’ பார்த்தாலே வாகனங்கள் மற்றும் உரிமையாளர் பற்றிய தகவல்கள் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

இனி புதிதாக ஒட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்கள் பதிவு செய்யக் கூடியவர்கள் நவீன ஸ்மார்ட் கார்டைப் பெற முடியும் என்று கூறினார். “ஏற்கனவே பழைய முறையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களும், இதற்கான கட்டணம் செலுத்தி புதிய கார்டைப் பெறலாம். இந்த கார்டு மூலம் முறைகேடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon