மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கேரள விவசாயிகளை உலுக்கிய வெள்ளம்!

கேரள விவசாயிகளை உலுக்கிய வெள்ளம்!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்தால் அம்மாநில விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான மழை வெள்ளத்தைக் கேரளா சந்தித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேதம் ஏராளம். நெல், வாழை, நறுமணப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்களின் சாகுபடிப் பரப்பு 45,000 ஹெக்டேருக்கு மேல் அழிந்துள்ளது. நடப்பு பருவத்தில் அம்மாநிலம் 57,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு நெல் விதைத்திருந்தது. அன்னாசிப் பழ உற்பத்தியில் ஈடுபட்ட தொடுப்புழா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.300 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காகத் தயாராக இருந்த வாழைத் தார்கள் முல்லைப் பெரியாறு பெருக்கெடுத்ததால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகத்தின் செயலாளரான சோபனா கே.பட்நாயக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்பால் சுமார் 3.14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ரூ.1,355 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் கால்நடைகள் பல வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பில் மட்டும் ரூ.800 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தி 30 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளதாக கேரள மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநரான சசி, ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு 87 லட்சம் லிட்டர் அளவிலான பால் தேவைப்படுகிறது. இதில் 80 சதவிகிதத்தை கால்நடைகள்தான் பூர்த்திசெய்து வருகின்றன. கேரளாவின் பால் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் வயநாடு, ஆழப்புழா மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon