மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

பாவாடை ராயனும் ராயபுரமும்!

பாவாடை ராயனும் ராயபுரமும்!

மதரா

பழைய சென்னைக்குள் ஒரு பயணம் - 12

ராயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருகை தருகின்றனர். குறிப்பாகக் குஜராத்திகள் இங்கு அதிகளவில் வருகின்றனர். இந்தக் கோவில் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தொடர்பாக எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. ஆனால் கோவிலின் எதிரில் இருக்கும் கல்மண்டபத்தை 1818ஆம் ஆண்டு புனரமைத்ததற்கான சான்றுகள் உள்ளன. இதனால் அதற்கு முன்பே கல்மண்டபமும் கோவிலும் இருந்துள்ளன என்ற முடிவுக்கு வரலாம். இந்தக் கோவிலின் வரலாறு, நம்பிக்கைகள் குறித்து வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் பல்வேறு கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அங்காள பரமேஸ்வரி கோவில் இங்கே அமைந்தது குறித்த கதை ஒன்று நிலவுகிறது. சிவனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை நடக்கிறது. அந்த சண்டையில் பிரம்மாவின் ஐந்தாவது தலையை சிவன் வெட்டிவிடுகிறார். வெட்டப்பட்ட தலை சிவனின் கைகளில் ஒட்டிக்கொள்கிறது. எவ்வளவு முயன்றும் கையிலிருந்து தலை விழவில்லை. இதனால் இரந்து உண்ணும் நிலைக்கு ஆளாகிறார். அப்போது தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம்புதூர் எனும் ஊரில் சிவன் கையில் தலையுடன் யாசகம் பெற முயல்கையில் அந்த ஊரின் காவலரான பாவாடை ராயன் சிவனை அடையாளம் காணாமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார். இரவில் சிவன் பாவாடை ராயனுக்கு காட்சி தர பாவாடை ராயன் தெய்வத்தையே சிறையில் அடைத்துவிட்டேன் என மனம் வருந்தி சிவனிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது சிவனோ நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் பனஞ்சாலை என்ற ஊருக்குப் போ அங்குப் பனை மரத்துக்கு அருகில் அருவமாக இருக்கிற அங்காளியிடம் சென்று மன்னிப்பு கேள் என்று கூறுகிறார்.

பாவாடை ராயனும் சிவன் சொன்ன இடத்திற்குச் சென்று அங்காளியிடம் மன்னிப்பு கேட்கிறார். அங்காளி தான் இருக்கும் இந்த இடத்தில் தனக்கு கோவில்கட்டக் கூறுகிறார். பாவாடை ராயனும் தனது குடும்பத்தாரை அழைத்து வந்து அங்காள பரமேஸ்வரிக்கு கோவில் கட்டுகிறார். ஆனால் அங்காளியின் சிலையை செய்யச் சித்தம் கிடைக்கவில்லை. அப்போது அங்காளியிடம் முறையிட எனது சிலையை ஊத்துக்காடு பாஞ்சாலர்கள் தான் செய்யவேண்டும். அவர்கள் வந்து சிலை செய்யும் வரை நான் அருவமாகத் தான் இருப்பேன் என்கிறார். பின்னர் ஊத்துக்காட்டு பாஞ்சாலர்கள் வந்த போது பாவாடை ராயனின் குடும்பத்தினர் நடந்ததை விளக்கிக் கூறினர். சிலை செய்ய சம்மதம் தெரிவித்த பாஞ்சாலர்கள் இரண்டு நிபந்தனைகளையும் விதிக்கின்றனர். ஒன்று சிலையுடன் கோவிலுக்கு எதிரே நாங்கள் கல்மண்டபம் அமைக்கவும் அனுமதிவழங்க வேண்டும். இரண்டு சிவராத்திரி பூஜையை எங்களது வம்சத்தினர் தான் செய்ய வேண்டும். மயானக் கொள்ளை நிகழ்வும் எம் வம்சத்தினர் தலைமையில் தான் நடைபெறவேண்டும் என்கின்றனர். பாவாடை ராயனின் குடும்பத்தினரும் அதற்குச் சம்மதிக்க நான்கு கைகளையுடைய அங்காள பரமேஸ்வரி சிலை வடிக்கப்பட்டது.

அங்காள பரமேஸ்வரியின் கோவிலில் மயானக் கொள்ளை மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் அங்காளியும் அவரது படைத்தளபதியான பாவாடை ராயனும் மயானத்திற்குச் சென்று அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாவாடை ராயனாலே இந்தப் பகுதிக்கு ராயபுரம் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

(அங்காள பரமேஸ்வரி கோவில் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய காணொளியைக் காண கிழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்)

பாவாடை ராயனும் ராயபுரமும்!

பழைய சென்னைக்குள் ஒரு பயணம்- முன்னோட்டம்

முன்னோட்டம்- காணொளி

ராயபுரம் ரயில் நிலையம்

ராயபுரம்: இந்த பெயர் வந்தது எப்படி?

மனிதம் போற்றும் ரெய்னி மருத்துவமனை!

ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட்!

திமுக: அடிக்கல் நாட்டப்பட்ட இடம்!

மாநகரின் முதல் கருணை இல்லம்!

முடிவை எதிர்நோக்கும் ரயில்வே பிரஸ்!

கணித மேதையை கௌரவப்படுத்தும் ராயபுரம்!

ராயபுரத்தில் விரியும் பார்சிகளின் வரலாறு!

சென்னையில் மக்கள் பணியாற்றிய பார்சி இனப் பெண்!

இந்துக்களின் புனிதத்தலமான தர்கா!

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon