மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

நீர்நிலை ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடுங்குற்றம் எனவும், அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வரும் ஆறுமுகம், கற்பகவள்ளி உள்பட 10 பேர், கடந்த 2008ஆம் ஆண்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்துவரும் வீடுகளுக்குப் பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் பட்டா வழங்க மறுப்பு தெரிவித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து, 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

25 முதல் 60 ஆண்டு காலம் அப்பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு வழங்கி உள்ளதாகவும், அந்த இடங்களுக்குப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மனுதாரர்கள் பட்டா கேட்கின்ற இடம் அரசுக்குச் சொந்தமான குளம் என்பதால் வீட்டு மனைப் பட்டா வழங்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, 2008ஆம் ஆண்டு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர முடியாது என நீதிபதி கூறினார். அரசு நிலத்தையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், இலவச பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதி, நீர்நிலைகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்த நீதிபதி, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டால் குறிப்பிட்ட அந்தப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

அரசு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

“சிறு மழைக்கே சென்னை நகரம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலை உள்ளது. இதற்குக் காரணம் மனிதனின் தவறுதான் என நிபுணர்கள் சுட்டிக் காட்டியும், அதிகாரிகள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடுங்குற்றம். அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் போதாது; சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

நீர்நிலைகளில் ஆக்கிரமித்து வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக வருவாய்த் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இரண்டு வாரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும், சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான பாதுகாப்புகளை மாநகரக் காவல் ஆணையர் வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon