மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

லாராவின் லிஸ்டில் இடம்பிடித்த கோலி

லாராவின் லிஸ்டில் இடம்பிடித்த கோலி

விராட் கோலி, ஜோ ரூட் இருவரும் உலகின் தலைசிறந்த வீரர்கள் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என்று கைப்பற்றியது. 29 வயதான இந்திய வீரர் விராட் கோலி இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கோலி இந்தத் தொடரில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் உட்பட 544 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ரெட்இட் இணையதளத்தில் நடைபெற்ற Ask Me Anything கேள்வி பதில் நேரத்தில் பதிலளித்த லாரா, இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இருவரும் உலகின் தலைசிறந்த வீரர்கள் என்று தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜேம்ஸ் அண்டர்சன், காகிசோ ரபாடா இருவரும் தலை சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

லாராவின் காலகட்டத்தில் முத்தையா முரளீதரன், ஷேன் வார்ன் இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்ததாகக் கூறிய அவர், "எனது ஆரம்ப கட்டத்தில் ஷேன் வார்னைக் காட்டிலும் முரளீதரன் என்னை மிகவும் குழப்பி விடுவார். எனது ஆட்டத் திறன் மேம்படத் துவங்கியதும் முரளீதரனை சமாளிக்க கற்றுக்கொண்டேன். இருவரும் என் காலத்து சிறந்த பந்துவீச்சாளர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

49 வயதான லாரா உலகின் 400 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் அட்டவணையில் ஐசிசி மாற்றத்தைக் கொண்டுவந்ததில் இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், "டி20 வடிவ ஆட்டங்களின் வளர்ச்சியை ஐசிசி கருத்தில் கொண்டுள்ளது. அதிக சுவாரசியம் கொண்டுள்ளதால் எல்லா நாடுகளும் இயற்கையாகவே இந்த வடிவத்துக்கு ஈர்க்கப்பட்டுவிட்டன. எனவே டெஸ்ட் ஒருநாள் போன்ற நீள வடிவிலான ஆட்டங்களுக்குத் தரம் என்பது அவசியமாகிறது. அதனை உலகின் தலைசிறந்த அணிகளால்தான் தரமுடியும். எனவே டி20 உலகக் கோப்பைக்கு 16 அணிகளும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு 10 அணிகளும் சரியான தேர்வாக இருக்கும் என்று கருதினேன்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon