மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

அண்ணா பல்கலை. மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள்!

அண்ணா பல்கலை. மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகமானது, அதன் கீழ் செயல்படும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும், வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு அளித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

புதிதாகச் சேர்ந்த மாணவர்களை மூத்த மாணவர்கள் ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு வாகனம் ரோந்துப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கிங் தடுப்புக் குழுவினர் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தில் அரட்டை அடித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கக்கூடாது. வகுப்புகளைப் புறக்கணிக்காமல் பங்கேற்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் காதில் ஹெட்போன் அணிந்து வரக்கூடாது. மொபைல் போன், ஹெட்செட் போன்றவற்றைக் கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.

மாணவ, மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது. வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால், முகத்தை மூடும் கண்ணாடியை திறந்துவிட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், காவலாளிகள் என சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், மாணவ மாணவியர் தங்களது அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon