மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ஆட்சி கலைப்பு: தேர்தலுக்கு தயாராகும் தெலங்கானா!

ஆட்சி கலைப்பு: தேர்தலுக்கு தயாராகும் தெலங்கானா!

தெலங்கானா அரசைக் கலைக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது. மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. மாநிலத்தின் முதல் முதல்வராக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலுடன் தெலங்கானா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருந்தது. ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க உகந்த சூழல் நிலவுவதால், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு திட்டமிட்டது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 6) முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் ஐதராபாத்திலுள்ள பிரகதி பவனில் மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் வரை நடந்த இக்கூட்டத்தில் சட்டமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநர் நரசிம்மனை சந்தித்தார். அவரிடம் ஆட்சியைக் கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தைக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநரின் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், “முதல்வர் சந்திர சேகர ராவ், தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று ஆளுநரை சந்தித்தார். மேலும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெலங்கானா மாநிலத்தின் முதல் சட்டப்பேரவையைக் கலைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் காபந்து அரசு தொடர வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். சந்திரசேகர ராவும் அதனை ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி கலைப்பு தொடர்பான அறிவிப்பு தெலங்கானா அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்துடன் தெலங்கானாவிற்கும் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு தயாராகும் வகையில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததையும், கண் சிமிட்டியதையும் இந்த நாடே பார்த்தது. ராகுல் தெலங்கானாவிற்கு வந்தால் நாங்கள் கூடுதலாக சில இடங்களில் வெற்றிபெறுவோம். மரபுப்படி ராகுல்காந்தி டெல்லி காங்கிரஸின் சுல்தானாக இருக்கிறார். காங்கிரஸ் பேரரசின் அதிகாரப்பூர்வ வாரிசாக அவர் இருக்கிறார். காங்கிரஸுக்கும், டெல்லிக்கும் அடிமையாக நாங்கள் இருக்க வேண்டாம். இதனை மக்களிடம் முறையிடுவோம். நாங்கள் சட்டசபை தேர்தலை தனியாகவே சந்திக்க முடிவு செய்துள்ளோம். மஜ்லிஸ் இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியுடன் எப்போதும் தோழமையுடன் இருப்போம்” என்று தெரிவித்தார்.

“2014ஆம் ஆண்டுக்கு முன் தெலங்கானாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள், மின்சாரப் பற்றாக்குறை, மதமோதல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்போது நாம் அவற்றிலிருந்து விடுபட்டுள்ளோம். நான் காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்து கேட்கிறேன், களத்திற்கு வாருங்கள், எங்களுடன் தேர்தலில் மோதுங்கள். பொதுமக்கள் உங்களுக்கு தகுந்த பதிலைத் தருவர்” என்று தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் 100 சதவிகிதம் மதச்சார்பற்ற கட்சி. அப்படி இருக்கையில் பாஜகவுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்” என்று பதிலளித்தார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon