மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ஹெல்மெட்: அரசு விளக்கமளிக்க உத்தரவு!

ஹெல்மெட்: அரசு விளக்கமளிக்க உத்தரவு!

இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக, விழிப்புணர்வை ஊட்டும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மோட்டார் சட்ட விதிகளின் படி, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை. அதை அமல்படுத்த வேண்டும்” என்று கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக, கூடுதல் ஆணையர் சார்பில் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில், சாலை விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சுமார் 20 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டில் சுமார் 42 கோடி வரை அபராதம் விதித்ததாகவும், 2018ஆம் ஆண்டு ஜூலை வரை 15 லட்சம் அபராதம் விதித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், தமிழக அரசிடமும் காவல் துறையிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை, எந்த விழிப்புணர்வும் அரசு வழங்கவில்லையே? அந்த சட்டத்தை அமலாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதா, இல்லை நீதிமன்றத்திற்கு உள்ளதா? ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் என்ற சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதா? சிக்னல்களில் நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா? விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல் துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புகைப்படத்திற்கு போஸ் மட்டும் கொடுப்பதா?” என்று தமிழக அரசு மற்றும் காவல் துறையை நோக்கி அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏன் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றும், முறையான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கி இருந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் அதிகரித்து வழக்குகள் குறைந்திருக்காதா என்றும் கேட்டனர்.

வாகனங்களில் பயணிப்போர் ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது குறித்து, தமிழகக் காவல் துறையின் டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon