மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சர்க்கரை: முதலிடத்தைப் பிடிக்குமா இந்தியா?

சர்க்கரை: முதலிடத்தைப் பிடிக்குமா இந்தியா?

சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் பிரேசிலை முந்தி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கவுள்ளது.

தற்போது உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளன. 1990ஆம் ஆண்டு முதல் முதலிடத்தில் இருந்து வரும் பிரேசில் தற்போது தனது முன்னிலையை இழந்து வருகிறது. ஏனெனில், பிரேசில் நாட்டின் ஆலைகள் சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் உற்பத்திக்கு அதிகளவிலான கரும்புகளை ஒதுக்கி வருகின்றன. மேலும், குறைவான முதலீடுகளால் கரும்பு உற்பத்தியும் சரிந்து வருகிறது.

இதே நேரத்தில், இந்தியாவில் சர்க்கரைத் தொழிற்துறைக்கு மானியத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளதால், அக்டோபர் முதல் துவங்கும் சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி சுமார் 3.5 கோடி டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலத்தில் பிரேசிலின் சர்க்கரை உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஒரு கோடி டன் சரிந்து மூன்று கோடி டன்னாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்ந்து வருவதாலும், சர்க்கரையின் விலை நியூயார்க்கில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாலும், பிரேசில் நாட்டில் உள்ள ஆலைகளுக்குச் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. ஆனால், இந்திய ஆலைகளுக்கோ எத்தனால் உற்பத்திக்கான வாய்ப்புகள் இல்லாததால் சர்க்கரையை உற்பத்தி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தைப் பிடிப்பதோடு, ஏற்றுமதி வாய்ப்புகளும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon