மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

தன்பாலின உறவு வழக்கின் தீர்ப்பு : ஐநா வாழ்த்து!

தன்பாலின உறவு வழக்கின் தீர்ப்பு : ஐநா வாழ்த்து!

தன்பாலின உறவு குற்றமாகாது என்றும் அதனைக்குற்றமாக்கிய இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து இன்று(செப்—6) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் பாராட்டிய ஐநா சபை இது இந்தியாவின் அடிப்படை உரிமைகளுக்கான முதல் நடவடிக்கை என்று வாழ்த்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையில் ரோஹின்டன் பாலி நரிமன், ஏஎம்.கான்வில்கர்,டிஒய்,சந்திர சௌத்,மற்றும இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு இவ்வழக்கினை விசாரணை செய்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசியல் அமர்வின் 4 நீதிபதிகள் தனித்தனியே ஆனால் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பை வழங்கினர்.

இந்தியாவில் தனிநபரின் பாலின விருப்பங்கள் குற்றச்செயலாகவே பார்க்கப்பட்டன. இது காலனிய காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களில் பிரதிபலித்தது. அந்த காலங்களில் தன்பாலின உறவுகள் இயற்கைக்கு மாறானது என்றும் விலங்குகள்தான் அதில் ஈடுபடும் என்றும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. தன்பாலின உறவை மனநோய் என்ற பார்வையையும் அக்காலத்திய மருத்துவ உலகம் முன்வைத்தது. ஆனால் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் தனி நபர்களின் பாலின விருப்பங்களை வெளிப்படையாக தெரிவிக்க வைத்தன. இதனை சர்வதேச சமூகமும் அங்கீகரித்தது.

இந்த மாற்றங்கள் ஐநாவை பாலினச்சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற அடிப்படையில் சட்ட உடன்பாடுகள் உருவாகவும் வழிவகுத்தன. இந்நிலையில் நீண்ட காலமாக தன்பாலின உறவுக்கான உரிமைகளுக்காக நடந்து வந்த சட்டப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்போராட்டம் 2009இல் தொடங்கியது.

2009இல் டெல்லி உயர்நீதிமன்றம், தன்பாலின உறவை குற்றச்செயல் அல்ல என்று தீர்ப்பளித்தது. பின்னர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 2013இல் தன்பாலின உறவு குற்றச் செயல் எனத் தீர்ப்பளித்தது. . உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கோரி நாஸ் பவுண்டேசன் உள்ளிட்ட சில அரசு சாரா நிறுவனங்கள் பல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை அரசியல் அமர்வின் கீழ் சில நாட்களாக நடந்து வந்தது. தற்போது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் நால்வரும் தனித்தனியே வழங்கிய தீர்ப்புகளில், பாலின உறவு குறித்த விருப்பம் என்பது தனி மனிதனின் உள்ளார்ந்த விருப்பம், அது அடிப்படை உரிமை என்று வலியுறுத்தியுள்ளனர். பாலின விருப்பங்கள் குறித்து பெரும்பான்மையினரின் கருத்துக்களையும், பொது ஒழுக்கவாதத்தையும் வைத்துக்கொண்டு அரசியல் சட்ட உரிமைகளை தீர்மானிக்க முடியாது. ஒரு தனிநபரின் பாலின விருப்பத்தை அங்கீகரிக்க மறுப்பது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும். எனவே காலனிய காலத்து இந்திய தண்டனைச் சட்டப்பிரிவான 377ஐ ரத்து செய்கிறோம். தன்பாலின உறவு குற்றச்செயல் அல்ல. ஆனால் விலங்குகள் மற்றும் குழந்தைகளிடம் உறவு கொள்வது குற்றச்செயல்களாகும் போன்ற இச்சட்டப்பிரிவின் பகுதிகள் நீடிக்கின்றன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon