மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிறப்புப் பார்வை: தாயை விடப் பசுவே முக்கியம்!

சிறப்புப் பார்வை: தாயை விடப் பசுவே முக்கியம்!

மனித உயிர் முக்கியமா அல்லது விலங்குகளின் உயிர் முக்கியமா என்ற கேள்வியை ஒரு குழந்தையிடம் கேட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தையிடமிருந்து மனித உயிரே முக்கியம் என்ற பதில் இயற்கையாக வரும். ஆனால், மாபெரும் நிபுணர்களையும், அறிஞர்களையும் கொண்டு, 134 கோடி மக்களைக்கொண்ட இந்தியாவுக்குத் தலைமை தாங்கும் பாஜக அரசு விலங்குகள்தான் முக்கியம் என்கிறது. மனிதர்களை விட மாடுகளே முக்கியம் என்ற கொள்கையைப் பகிரங்கமாக கடைப்பிடிக்கிறது. அதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி கடைகள் வைத்திருந்தாலும் மாடுகளைக் கூட்டிச் சென்றாலும் அதைக் குற்றம் என்று சட்டம் இயற்றி அமல்படுத்துகிறது.

பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் முன்னணி அமைப்புகள் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களையும் மாடுகளைக் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்பவர்களையும் விட்டு வைப்பதில்லை. அக்கட்சியினரின் பசுப் பாதுகாவலர்கள் (கோ ரக்ஷக்) என்ற பெயரில் செயல்படுபவர்கள் எளிய மக்களை அடித்தே கொல்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், தெரியாத விஷயம் பாஜக அரசின் சமீபத்திய நடவடிக்கை.

ஆக்சிடோன் மருந்தின் முக்கியத்துவம்

மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ஆக்சிடோன் என்ற முக்கிய மருந்தைத் தடை செய்துள்ளது. ஆக்சிடோன் என்பது ஒரு ஹார்மோன். அது தாய்மைப் பேறு அடையும் பெண்களுக்குப் பிரசவத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் இயற்கையாகச் சுரக்கும். பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கினைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த ஹார்மோன் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தவும் செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

தாய்மார்களின் உடலில் இயற்கையாகச் சுரந்தாலும் அது போதாக்குறையாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் தற்காப்பிற்காக இது தாயாரின் உயிரைக் காப்பதற்குப் பிரசவத்தின்போது ஊசி மூலம் செலுத்தப்படும். பிரசவத்திற்கு முன்னதாக வலி ஏற்படும்போதே ஊசி மூலம் செலுத்தப்படும். பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்துவதற்கு ஆக்சிடோனை விட்டால் வேறு மருந்தில்லை. அதன் முக்கியத்துவம் கருதியே இந்த மருந்தானது தேசிய அத்தியாவசியமான மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த மருந்தைத்தான் பாஜக அரசு தடை செய்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ஆக்சிடோனி்ன் பயன்பாட்டைக் குறைக்க முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர், ஒரே ஒரு பொதுத் துறை நிறுவனத்திற்கு மட்டும்தான் (இந்தியா முழுமைக்கும்) ஆக்சிடோனைத் தயாரிப்பதற்கு லைசன்ஸ் அளித்துள்ளது. கர்நாடக ஆன்ட்டிபயோட்டிக்ஸ் அண்ட் பார்மாச்சூட்டிக்கல்ஸ் லிமிடெட் (Karnatic Antibiotics and Pharmaceuticals Limited- KAPL) என்ற கம்பெனியானது பிரதான் மந்திரி பாரதிய ஜனாஷாதி பாரியோஜனா என்ற திட்டம் மற்றும் வாங்க முடியும் மருந்துகள் மற்றும் நம்பகத்தன்மையுடைய மாற்று உறுப்புகள் திட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே இந்த மருந்தை விற்கவும் பயன்படுத்தவும் லைசன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.

எதற்காகத் தடை?

பால் மாடுகள் வளர்க்கும் பண்ணைகளில் பால் அதிகம் சுரக்க அவற்றின் ஹார்மோன்களைத் தூண்டிவிட ஆக்சிடோன்களைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்துகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இதனால் மாடுகள் பாதிக்கப்படும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2014இல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி சுகாதார அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் சட்ட விரோதமாக ஆக்சிடோன் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் மாடுகளின் இழப்பைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆக்சிடோனைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.

2016 மார்ச் 15இல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் பொதுத் துறை நிறுவனங்களில் மட்டும் ஆக்சிடோன் தயாரிப்பை மேற்கொள்வது சாத்தியமா என்று கேள்வி எழுப்பியது. ஆனால் நீதிமன்றத்தின் கேள்வி கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது சட்ட விரோதமான முறையில் ஆக்சிடோன் லைசன்ஸ் இல்லாது சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்டுவருகிறது.

சுகாதாரத் துறையில் பணிபுரியும் செயற்பாட்டாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கையானது பெண்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்தைவிடப் பசுக்களைக் காப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

மரண விகிதம் அதிகரிக்கும்

மகப்பேறு மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் ஜெய்தீப் மல்ஹோத்ரா கூறுகையில், இந்தத் தவறான முடிவினால் பிரசவத்தின் நிகழும் அன்னையரின் மரண விகிதம் அதிகரிக்கும் என்று குற்றம்சாட்டுகிறார். மேலும், அவர் கூறுகையில், சிறிய அளவிலான கிளினிக்குகளில் ஒரு மாதத்திற்கு 10 பிரசவங்கள்தான் மேற்கொள்ளப்படும். அவர்கள் இந்தத் தடையினால் மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் 70 விழுக்காடு பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர் போன்று ஏதாவது எதிர்பாராது நேரிட்டு கேபிஎல் நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டால் எப்படி நிலைமையை எதிர்கொள்வது, அதற்கு ஏதாவது தயார் திட்டங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்புகிறார்.

கேபிஎல் நிறுவனம் குறித்து சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் வேறு சில பிரச்சினைகளையும் எழுப்புகின்றனர். கேபிஎல்லுக்கு ஆக்சிடோன் தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லை. அது முதல் முறையாக மருந்து தயாரிப்பில் கடந்த ஜூலையில்தான் இறங்கியது. ஒவ்வோர் ஆண்டும் ஆறு கோடி ஊசி மருந்துகள் தேவைப்படுகின்றன. கேபிஎல்லில் விற்கப்படும் ஆக்சிடோனி்ன் விலை மற்ற மாநிலங்களில் விற்கப்படும் விலையைக்காட்டிலும் அதிகமாகும். இதனால் அதிக விலை கொடுத்து வாங்குவதால் மாநிலங்களின் நிதிச்சுமை கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர்களின் சங்கம் சுகாதாரத் துறை அமைச்சகத்திற்குத் தனது கவலைகளைத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய மருந்துச் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது. இதற்கான பதிலை அளிக்குமாறு அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை, ஆக்சிடோனை பால் பண்ணைகளிலுள்ள மாடுகளிடம் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகள் எதையும் சுட்டிக்காட்டவில்லை. தேசிய சத்துணவுக்கான நிறுவனமும் தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வுகளில் பாலிலுள்ள ஆக்சிடோன் மனித உடலில் கண்டுபிடிக்க முடியாதபடி உடலில் கரைந்துவிடும் என்று கூறியுள்ளது.

மாட்டைக் காப்பாற்றக் கெடுபிடிகள்

ஆக்சிடோனைத் தவிர அதற்கு மாற்றாக கார்பெட்டோசின் போன்ற மருந்துகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. மெதர்ஜின் மற்றும் மிசோபுரோஸ்ட்டோல் (உட்கொள்ளக்கூடிய மருந்து) ஆகியன பக்க விளைவுகளை உருவாக்கக்கூடியன.

நிலைமை இப்படியிருக்க, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அறிவிப்பாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் மருந்துகள் மற்றும் முகப்பூச்சுகள் விதிகள் 1945களிலுள்ள அட்டவணைகளில் ஆக்சிடோன் ஹெச்சிலிருந்து ஹெச்.1ஆக மாற்றப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் சாதாரண சில்லறை மருந்துக் கடைகள் ஆக்டோசினை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற அரசுக்கு ஏராளமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பசுவைக் காப்பாற்ற இவ்வளவு கெடுபிடிகள் செய்யும் அரசு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மற்ற மருந்துகள் விஷயத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா? இதைவிட மோசமான மருந்துகளையும் ஆன்ட்டிபயோட்டிக் மருந்துகளையும் தவறான முறையில் பயன்படுத்தும் பால் பண்ணைகள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை விற்கும் மருந்து கம்பெனிகள், மருந்துக் கடைகள் மீதும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.

தற்போது இந்தியாவில் மாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பு மனிதர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்று வெளிநாட்டினர் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். அதை நிரூபிப்பதாக நடப்பு நிகழ்வுகள் அமைந்துவருகின்றன.

சேது ராமலிங்கம்

துணை நின்றவை:

1.Counter Currents.org

2.Down To Earth dated 1-15,sep ,2018

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 24 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon