மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: பச்சை பயறு குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: பச்சை பயறு குழம்பு!

தினமும் காலையிலே எழுந்ததும் என்ன குழம்பு வைக்கறதுன்னு யோசனை பண்ணி, சாம்பார், காரக் குழம்பு, மசாலா குழம்புன்னு தினமும் ஒரே குழப்பத்துல இருக்குற உங்களுக்காக, ஈசியாக செய்யக்கூடிய பச்சை பயறு குழம்பை எப்படி வைக்கலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு - அரை கப்

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தக்காளி - 1

சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை

பூண்டு - 2 அல்லது 3 பற்கள்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சை பயறை நன்கு கழுவி 5 முதல் 6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பயறை, ஊறல் வாசனை போகும்வரை நன்றாகக் கழுவிவிட்டு, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

புளியை நன்கு ஊற வைத்துப் பிழிந்தெடுத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவுக்குப் புளிச்சாற்றை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அதன் பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். புளித் தண்ணீரைச் சேர்த்து அத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து கொதிக்கவிடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பயறை லேசாக மசித்து சேர்த்துக் கிளறிவிடவும். மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறக்கி வைக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு

இந்தக் குழம்பு சப்பாத்திக்கும் நல்ல காம்பினேஷன்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது