மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… -2

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… -2

சேது ராமலிங்கம்

பொருளாதார நெருக்கடியில் பாசிசத்தின் விதை

பாசிசம் என்பதற்கான பொருளாக ஓர் எளிய விளக்கத்திற்காக சர்வாதிகாரம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நவீன உலகில் அதற்கும் மேலான சகித்துக்கொள்ள முடியாத கொடூரமான நிலையை உருவாக்குவதே பாசிசமாகும். பாசிசம் குறித்து எண்ணற்ற அரசியல் அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவற்றில் ஜார்ஜ் டிமிட்ரோவ், பால்மிரோ டோகிலியாட்டி, ரஜினி பாம்தத், ரொமிலா தாப்பா் போன்ற அறிஞர்களே ஓரளவுக்குச் சிறந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.

ஜார்ஜ் டிமிட்ரோவ் நாட்டைப் பொறுத்து பாசிசத்தின் தன்மை மாறுபடும் என்கிறார். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் 1930களில் இருந்த நிலைமையைத் தற்போது பொருத்த முடியாது. 1990களுக்குப் பின்னர் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு ஏற்பப் புதிய வடிவில் பாசிசம் உருவெடுத்துள்ளது. ஆனால், சர்வதேச அளவில் அரசியல் அறிஞர்கள், ஐநாவின் மனித உரிமை நிபுணர்கள், இடதுசாரிக் கட்சிகள், இடதுசாரி அல்லாத முதலாளித்துவக் கட்சிகள் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் ஆகியவை பாசிசம் குறித்த பொதுத்தன்மைகளை வரையறுத்துள்ளனர்.

பாசிசத்திற்கான தன்மைகள்

அந்த வரையறைகளில் முக்கியமானவற்றைக் காண்போம். ஒருபுறம் மிகப்பெரிய அளவில் செல்வம் குவிக்கப்பட்டிருப்பதும் மறுபுறம் மிகக் கடுமையான வறுமையும் நிலவும். அரசியல் சாசனமும் அதிலுள்ள அடிப்படை உரிமைகளும் ரத்து செய்யப்படும். ஜனநாயக நிறுவனங்களான நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், நீதிமன்றங்கள் மூடப்படும். மக்கள் மீது பொருளாதார தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படும். மதவாதத்தின், இனவாதத்தின் அடிப்படையில் தீவிரமான முறையில் அவற்றின் மேன்மைத்தனம் நிறுவப்படும். அதனடிப்படையில் வரலாறு திரிக்கப்படும். பண்பாடு கட்டமைக்கப்படும். இது பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் (பெரும்பான்மை மதத்தினர் அல்லது இனத்தினர் அடிப்படையில் உருவாக்கப்படும்).

வெளியாளாக எதிரி ஒருவர் உருவாக்கப்படுவார். அந்த வெளியாள் என்பவர் அண்டைய நாடாகவோ அல்லது சிறுபான்மையினராகவோ இருக்கலாம். பொருளாதாரம் முழுமையாகச் சீர் குலைந்திருக்கும். இதனால் எப்போது வேண்டுமானாலும் பெரும் கிளர்ச்சிகளோ அல்லது புரட்சியோ வெடிக்கக்கூடிய சூழல் நிலவும். இந்த வரையறைகள் ஒவ்வொரு நாட்டுக்கேற்றவாறு சற்று மாறலாம். இருப்பினும் இவையே பொதுவான தன்மைகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எந்த நிலைமைகளில் பாசிசம் அமல்படுத்தப்படுகிறது என்பதற்கு முக்கியக் காரணமாகப் பொருளாதார நெருக்கடியையே ஜார்ஜ் டிமிட்ரோவ் முன் வைக்கிறார். இதனை விளக்கமாகக் காண்போம்.

பாசிசம் எப்படி உருவெடுக்கிறது?

முதலாளிய உற்பத்தி முறை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து குவிக்கிறது. அப்படி உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வேண்டும். இங்கு இரண்டுவிதமான நெருக்கடிகள் முதலாளியப் பொருளாதார முறைக்கு ஏற்படுகின்றன. பொருட்களை விற்பதற்குச் சந்தை இல்லாமல் போவது. இன்னொன்று மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாமல் போவது. அப்போது சரக்குகள் தேங்க ஆரம்பிக்கின்றன. இந்த நெருக்கடிகளைத் தீர்க்க எப்போதும் அரசு தலையிடும். வங்கிகளின் கடன் உதவிகள் மூலம் முதலாளிகளின் நெருக்கடிகள் தீர்க்கப்படும். ஆனால், வங்கிகளின் கையிருப்பு மூலதனமும் (Liquidity Crisis) நிதி மூலதனமும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும்போது அதை இருக்கும் அரசியல் ஜனநாயக அரசியல் அமைப்பிற்குள் தீர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம், வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்ற பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் ஏற்படும் மக்களின் கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் போகும். இது போன்ற கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வாகப் போர்கள் நடத்தப்படும். போர்கள் நடத்தப்பட முடியாத சூழலில் பாசிசம்தான் தீர்வாக அமைகிறது. முதல் உலகப் பொருளாதார நெருக்கடி (world recession), முதல் உலகப் போரின் மூலமாகவே தீர்க்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரும் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பாசிசத்தை அமல்படுத்தி அனைவருக்கும் தேசிய வெறியையும் போர் வெறியையும் ஏற்படுத்தி நடத்தப்பட்டன என்பது உலக வரலாறு.

இருக்கின்ற அரசியல் சமூகப் பொருளாதார அமைப்புக்குள் நிதி மூலதனம் மற்றும் தொழில் மூலதனத்தின் நெருக்கடியைத் தீர்க்க முடியாது போகும்போது நாடாளுமன்ற ஜனநாயக முறையை முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட்டு மக்களைத் திசை திருப்பி மதவாதம் அல்லது இனவாத சிந்தாந்த வெறியூட்டி புதிய எதிரியை உருவாக்கி அமல்படுத்தப்படும். இதில் அரசியல் மற்றும் பொருளாதார அரங்கிலுள்ள அனைத்துப் போட்டியாளர்களும் ஒழித்துக்கட்டப்படுவார்கள் அல்லது சிறையில் தள்ளப்படுவார்கள்.

தாராளவாதக் கொள்கைகளும் ஒரு காரணம்

புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் உலகமெங்கும் பாசிசத்திற்கான நிலைமைகள் கனிந்துவருவதாகப் பொருளாதார அறிஞர் சமீர் அமீன் குறிப்பிடுகிறார். இலங்கை எப்படி இனவாதத்திற்கும் அதன் அடிப்படையிலான பாசிசத்திற்கும் தள்ளப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத வரலாறு. தெற்காசிய நாடுகளிலேயே 80களுக்கு முன்னதாகப் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்க நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றில் அமல்படுத்தப்பட்ட தாராளவாதக் கொள்கைகள் அந்த நாடுகளைப் போர் வெறி பிடித்த பாசிச நாடுகளாக மாற்றிவிட்டன. உலக நடப்பு நிகழ்ச்சிகள் அடிப்படையாகக் கொண்டு சில அறிஞர்கள் புதிய தாராளவாதக் கொள்கைகளும் நெருக்கடிகளுக்கும் அதன் தவிர்க்க முடியாத விளைவாக பாசிசத்திற்கும் இட்டுச்செல்லும் என்ற கோட்பாட்டையும் முன்வைக்கின்றனர்.

மதவாதம் அல்லது இனவாதம் அடிப்படையில் தேசிய வெறியூட்ட பாசிஸ்ட்டுகள் நம்பியிருப்பது நடுத்தர வா்க்கத்தினரையும் உதிரித் தொழிலாளர்களான அமைப்புசாரா தொழிலாளர்களையும்தான். உலக நாடுகளில் நடுத்தர வர்க்கம்தான் பாசிசத்திற்கான சமூக அடித்தளமாக விளங்குகிறது. முன்னதாக நமது நாட்டில் நெருக்கடி நிலை என்ற பெயரில் பாசிசம் அமல்படுத்தப்பட்டபோது நடுத்தர வர்க்கமே அதை ஆதரித்தது. தாராளவாதக் கொள்கைகளையும் சுதந்திர வா்த்தகத்தையும் ஏகமனதாக ஆதரித்தது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததற்கும் நடுத்தர வர்க்கமே பெரிய ஆதரவு சக்தியாக இருந்தது. உடனடியாக எந்த நாட்டிலும் பாசிசம் அமல்படுத்தப்படுவதில்லை. முதலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்களின் மனங்களை பாசிசத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளத் தயார் செய்வார்கள்.

அமைதியை விரும்பும் மக்கள் எப்படிப் போர் வெறி, இனவெறி பிடித்தவர்களாக மாறுவார்கள் என்பதை நாளை காண்போம்.

தொடரின் முதல் பகுதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon