மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மின்வெட்டு: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

மின்வெட்டு: அரசுக்கு  நீதிமன்றம் கேள்வி!

காற்றாலை மின்சாரத்தை தமிழக அரசு வேண்டுமென்ற பயன்படுத்தாமல் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் பல்வேறு கேள்விகளை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கட சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு நிலக்கரி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையே, காற்றாலை மின்சாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருப்பதாக மின் பகிர்மான கழகத்திற்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்தியது.

ஆனால் காற்றாலை மின்சாரத்தை மின் பகிர்மான கழகம் பயன்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று(செப்டம்பர் 27) விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் மின் பற்றாக்குறை உள்ளதா என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி அதற்கு நேரில் ஆஜராகி பதிலளிக்கும் படி மின்துறை செயலாளரும் மின் பகிர்மான கழக தலைவருமான முகமது நஸிமுதீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “மின் மிகை மாநிலம் எனக் கூறப்பட்ட தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவே இந்த மின்வெட்டு ஏற்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய காலத்தில் மின்சாரம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது

மின்சாரம் இல்லாமல் பத்து நிமிடங்கள் கூட வாழ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது

இந்தச் சூழ்நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல்,

*தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா?

*அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா? அப்படியானால் அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*மின்வெட்டு இருந்தால் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்த கூடாது

*காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தாததால் காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்களா?

*எத்தனை காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று உள்ளன

*காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் எவ்வளவு தொகை பாக்கி வைத்துள்ளது

*வெளி மாநிலங்களில் இருந்து அதிக தொகைக்கு மின்சாரம் வாங்குவதற்காகவே போதுமான நிலக்கரியை இருப்பில் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்த வில்லை என்றும் கூறப்படுவது உண்மையா?

*தொழில் நிறுவனங்கள் பெருகி வரும் நிலையில் எதிர்காலத்தில் மின்சார தேவையை சமாளிக்க திட்டம் ஏதும் உள்ளதா?

* மின்வெட்டு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதி இவற்றிற்கு வரும் 28ம் தேதி மின் பகிர்மான கழக தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்குக் காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon