மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்கள்!

காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்கள்!

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ’அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேலையை இழந்த ஊழியர்கள் புதிதாக வேலை தேடும்போது அவர்களுக்கான உதவித் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில், ’அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேலையை இழந்து புதிய வேலை தேடும்போது, முன்பு அவர்கள் பெற்ற சராசரி ஊதியத்தின் 25 சதவிகிதம் வழங்கப்படும். தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தால் (ESI) தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், காப்பீடு செய்துள்ள சுமார் 3.2 கோடிப் பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’புதிய தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ESI நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்குப் புதிய ஊழியர்கள் செலுத்தவேண்டிய 12 சதவிகிதப் பங்களிப்பு அரசால் வழங்கப்படுகிறது. இதனால், தொழில் உரிமையாளர்களுக்கு எந்தச் சுமையும் இருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 87,000 நிறுவனங்களில் உள்ள 72 லட்சம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்புக்காக மத்திய அரசு ரூ.1,744 கோடியை வழங்கியுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் ESI நிறுவனப் பயன்களோடு இணைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கோடிக்கும் அதிகமானோர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon