மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

பாலியல் புகார்: ஐஜி முருகனை காப்பாற்றும் முதல்வர்!

பாலியல் புகார்: ஐஜி முருகனை காப்பாற்றும் முதல்வர்!

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஐஜி முருகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்றிவருவதாகக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருக்கும் முருகன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. விசாகா கமிட்டியின் தலைவராக மாநிலக் குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் நியமிக்கப்பட்டார். இந்தக் கமிட்டி பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனத் தமிழக டிஜிபியிடம் கடந்த 27 ஆம் தேதி பரிந்துரை செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனினும் இந்தப் புகார் தொடர்பாக ஐஜி முருகன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பணியாற்றும் அலுவலகத்திலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமையை மறந்து, தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், அந்தப் புகாருக்குள்ளான ஐ.ஜி. மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அந்த அதிகாரியைக் காப்பாற்றிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“குட்கா ஊழலில் இருந்து தப்பிக்க” தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனும், தன் மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சந்தர்ப்பவாத ஊழல் “கூட்டணி” அமைத்துக் கொண்டு, ஐ.ஜி. முருகனுக்கு சட்டத்திற்குப் புறம்பான பாதுகாப்பு வழங்கித் தப்பிக்க வைக்கும் அவலச் செயலால், “விசாகா கமிட்டி” வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அப்பட்டமாக மீறி நீதிமன்ற அவமதிப்புக்கே உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

புகாருக்குள்ளான ஐ.ஜி.க்குப் பரிசு அளிப்பது போல், முதல்வர் மீதான ஊழல் வழக்கு, துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கரின் “20 கோடி லஞ்ச வழக்கு”, அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் “கம்பெனிகள் கரெப்ஷன்” வழக்கு ஆகியவற்றை விசாரிக்கும் பொறுப்பினை இந்த ஐ.ஜி.யிடம் கொடுத்து, “பாலியல் புகாரிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம்; எங்களை ஊழல் புகார்களிலிருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று, ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் போட்டு, அந்த ஐ.ஜிக்கு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் “சல்யூட்” அடித்து நிற்பது, அமைச்சரவைக்கே என்றும் மாறாத அவமானம் என்பதுடன், தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஸ்டாலின்.

பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐ.ஜி. முருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கிருந்து மாற்றப்பட வேண்டும் என்றும், சி.பி.சி.ஐ.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஐ.ஜி. கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் ஐ.ஜி. கைது செய்வதைத் தடுத்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் “குற்றவாளிக்கு அடைக்கலம்” கொடுத்த கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon