மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: தமிழகத்தில் பாஜகவின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: தமிழகத்தில் பாஜகவின் அதிரடித் திட்டம்!

அலுவலகத்துக்குள் நுழைந்தோம். வைஃபையில் கனெக்ட் ஆனது மொபைல். வாட்ஸ் அப்பிலிருந்து வந்து விழுந்தது மெசேஜ்.

“தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு ஆபரேஷனைத் தொடங்கியிருக்கிறது பிஜேபி. இதற்காக தமிழகத்தில் உள்ள பிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் சிலரை டெல்லி மேலிடமே தேர்வு செய்திருக்கிறது. பி.டி.அரசகுமார், கரு.நாகராஜன், வானதி சீனிவாசன், என்.எம்.ராஜா ஆகியோர் அந்தப் பட்டியலில் அடக்கம். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளும்தான் இந்த டீமின் டார்கெட். ஒவ்வொருவருக்கும் 3 நாடாளுமன்றத் தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் அந்தத் தொகுதிகளுக்குச் சென்று முதல் வேலையாக பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பூத் கமிட்டி இல்லாத ஊர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் முதல் அஜெண்டா. அப்படியான கமிட்டி அமைக்க ஒவ்வொரு ஊரிலும் பாஜக நிர்வாகிகள் அவசியம் வேண்டும். இல்லாத ஊர்களில் உடனடியாக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.

‘கட்சித் தலைமையிலிருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் இது. வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலைகளை முடித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊர்களில் உள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல் எங்கள் கையில் இருக்கு. அதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்கிறோம். ஒவ்வொரு தாலுக்காவிலும் உட்கார்ந்து அந்தத் தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை வரவழைத்து பூத் கமிட்டிக்கான ஆட்களைத் தேர்வு செய்கிறோம். அது முடிந்ததும் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒரு ட்ரிப் நேராகவும் போகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த கிராமங்களில் எந்தக் கட்சிக்கான செல்வாக்கு அதிகம் இருக்கிறது? எதனால் அந்தக் கட்சிக்குச் செல்வாக்கு கூடியிருக்கிறது? அங்கே அந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்க யார் காரணம்? உள்ளூரில் யாராவது ஒருவர் நினைத்தால் ஒட்டுமொத்த வாக்குகளும் மாற வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்தப் பிரமுகரைப் பற்றிய விவரங்கள் என அத்தனையும் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்துதான் அடுத்த மூவ் என்பது நகரும்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இதே ஃபார்முலாவைத்தான் எங்க கட்சி மேலிடம் கையில் எடுத்தாங்க. இப்போ அதைத்தான் தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கோம். இன்னும் சரியாக இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள அத்தனை வாக்குச் சாவடிகளிலும் எங்களது பூத் கமிட்டி தயாராக இருக்கும். அந்தக் கமிட்டி மூலமாகத்தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்குமான தேவைகளை நிறைவேற்றப்போகிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடக்காத காரணத்தால் இப்போது கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் கிடையாது. கிராமங்களுக்கு எந்த நல்லதும் போய்ச் சேருவதும் கிடையாது. இனி அந்த கிராமங்களுக்கு நிறைய நல்லதும் நடக்கும். அத்தனையும் எங்க நிர்வாகிகள் மூலமாக நடக்கும்.

நிர்வாகிகளோடு, டெக்னாலஜி தெரிஞ்ச ஆட்களும் கூட வராங்க. நாங்க பேசப் பேச அத்தனையும் அவர்கள் லேப்டாப்பில் அப்டேட் செய்தபடியே இருக்கிறார்கள். தினமும் எத்தனை பூத்துக்குப் போனோம், எவ்வளவு பேரைப் பார்த்தோம் என்பது வரைக்கும் டெல்லிக்கு ரிப்போர்ட் போய்டுது’ என்று சொன்னார் இந்த டீமில் வேலை பார்க்கும் நிர்வாகி ஒருவர்.

இது மட்டுமல்ல... அதிமுகவிலும் தினகரன் அணியிலும் இந்த ஊர்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது. ‘உங்களால் எவ்வளவு பேரைக் கூட்டிட்டு வர முடியும்? உங்க எதிர்பார்ப்பு என்ன?’ என நேரடியாகவே டீல் பேசுகிறார்களாம் சில நிர்வாகிகள். ‘நாங்களே ஆளுங்கட்சியில்தானே இருக்கோம். அப்புறம் எதுக்கு அங்கே வரணும்?’ என அதிமுக நிர்வாகி ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு, ‘நாங்க நினைக்கிற வரைக்கும் மட்டும்தான் நீங்க ஆளுங்கட்சியாக இருக்க முடியும். காற்று எப்பவும் உங்க பக்கமே வீசும்னு நினைக்காதீங்க. காத்து வீசப் போற பக்கம் வந்துடுங்க’ என்று சொன்னார்களாம் பிஜேபி நிர்வாகிகள். ஆனால் இதுவரை எந்தத் தொகுதியிலும் அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் யாரும் பிஜேபி பக்கம் வரச் சம்மதம் சொல்லவே இல்லையாம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் போஸ்ட் செய்தது ஃபேஸ்புக். “எனக்கும் இந்தத் தகவல்கள் எல்லாமே வந்தது. தமிழகத்தில் பிஜேபியின் இந்த திடீர் ஆபரேஷனைக் கண்காணிக்கும் பொறுப்பைத் தமிழிசை, பொன்னார் ஆகிய இருவரிடமும் கொடுத்திருக்கிறார்கள். இருவரும் அடிக்கடி தொகுதிகளுக்குச் சென்று பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா, கட்சி நிர்வாகிகள் கிராமங்களுக்கு வருகிறார்களா என்பதை எல்லாம் விசாரித்து டெல்லிக்கு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் அவர்களும் அந்த டீமைக் கண்காணிக்கக் களமிறங்கிவிட்டார்கள். ஆக, டார்கெட் தமிழ்நாடு எனக் களமிறங்கிவிட்டது பிஜேபி” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

லைக்ஸ் எதுவும் வரவில்லை. ஃபேஸ்புக் சைன் அவுட் ஆனது.

வியாழன், 27 செப் 2018

அடுத்ததுchevronRight icon