மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: சீமையிலிருந்து ஒரு பிற்போக்கு ராஜா!

சிறப்புக் கட்டுரை: சீமையிலிருந்து ஒரு பிற்போக்கு ராஜா!

ஜெ.வி.பிரவீன்குமார்

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியிருக்கிறது 'சீமராஜா'. இந்தக் கூட்டணியில் முதல் படமாக வெளியானது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. ஊருக்குள் வெட்டித்தனமாகச் சுற்றித் திரியும் ஓர் இளைஞனின் காதலும் , ஊர் வாய்க்குப் பயந்து வறட்டு கெளரவம் பார்க்கும் கறார் பார்ட்டி ஒருவருக்கும் இடையேயான மோதலுமாக அது வந்திருந்தது. வழக்கமான கிராமியக் காதல் படமாக அந்தப் படம் அறியப்பட்டாலும், சுற்றியுள்ள யாரோ நாலு பேரைத் திருப்திப்படுத்துவதற்காக வறட்டு கெளரவம் தேவையில்லை எனும் கருத்தையும் அதனூடே விதைப்பதாக இருந்தது.

அதன் பின்னர் வந்த ரஜினி முருகன், வழக்கமான காதல் கதையோடு சேர்த்துக் கூட்டுக் குடும்ப உறவுமுறை குறித்தும் கூறிச் சென்றது. மேற்கண்ட இரு படங்களுமே சுட்டிக்காட்டப்படக்கூடிய சில குறைகளைத் தன்னளவில் உள்ளடக்கியவைதான். ஆனால், கதை நிகழும் தளம், சூழல், கதை சொல்லப்பட்ட பாங்கு மற்றும் நோக்கம் போன்றவை அவற்றையெல்லாம் புறந்தள்ளிப் பெரும் விவாதங்களுக்குள் இட்டுச் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், பெரும் முஸ்தீபுகளுடன் தற்போது வந்திருக்கும் 'சீமராஜா'வோ எதிர் விமர்சனங்களை ‘வெல்கம் கார்டு’ போட்டு வரவேற்கிறது. எதிர்ப்புகளை எதிர்பார்த்தே உருவாக்கப்பட்ட படைப்பாகவே உருவாகியுள்ளது.

சில உணவுப் பண்டங்களைச் சமைக்கும்போது எல்லாம் செய்து முடித்துவிட்டுக் கடைசியாகச் சட்டியை இறக்கும்போது கொஞ்சம் மல்லித்தழையை அதில் பிய்த்துப்போட்டு இறக்குவார்கள். கிட்டத்தட்ட அதுபோலவே முழுக்க முழுக்க ஜமீன், மன்னர், சாதிப் பெருமை, காதல் எனச் சுழலும் கதையில், போனால் போகட்டும் எனக் கடைசியாகக் கொஞ்சம் விவசாயத்தைப் பிய்த்துப் போட்டு இந்த வண்டியை ஓட்டியிருக்கிறார் சீமராஜா. ஆனால் அந்த வண்டியையும் சரியான திசை நோக்கி ஓட்டாமல் பயணிகளை ஆபத்தான இடத்தில் கொண்டுபோய் விட்டிருப்பதுதான் ஆகப்பெரும் துன்பியல் நிகழ்வு.

படத்தில் சாதியின் இடம்

ஒரு படத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிப்பிடுவதாலேயே அது சாதி போற்றும் சினிமா ஆகிவிடாது. அதேநேரம், அந்தச் சாதி எந்த வகையில் படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்னும் விஷயம் ரொம்பவே முக்கியம். அதுபோலவே, எந்தப் படமும் எந்தக் குறிப்பிட்ட சமூகத்தையும் பெருமைப்படுத்தக்கூடிய கூறுகளைத் தன்னளவில் கட்டாயம் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதேநேரம், குறிப்பிட்ட எந்தச் சமூகத்தையும் பொதுமைப்படுத்திக் கீழ்மைப்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதும் அபாயகரமானதும் ஆகும்.

'சீமராஜா' படம், சாதியப் பெருமைகளை ஆங்காங்கே வலுவாகவே தூக்கிப்பிடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் போகிறபோக்கில் பிற சாதிகளையும் மட்டம் தட்டும் விதமாகச் சித்திரித்திருக்கிறது. உதாரணமாகப் படத்திலிருந்து சில விஷயங்களைப் பார்க்கலாம். படத்தின் முற்பகுதியில் ஒரு காட்சி. படத்தில் வில்லி ரோலில் வரும் சிம்ரன், ஒருகட்டத்தில் முறை தவறி நடப்பதாகக் காட்டுகிறார்கள். எனவே அவர் 'லம்பாடி' எனப் பொதுவெளியில் வசை பாடப்படுகிறார்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பின்தங்கியுள்ள சமூகமாக அறியப்படுபவர்கள் ‘லம்பாடி’ எனும் இனத்தைத் சேர்ந்தவர்கள். சாதிய அடுக்கிலும் பொருளாதாரத்திலும் மிகவும் நலிவுற்ற இனமாக அவர்களை வைத்திருக்கும் இச்சூழலில், முறை தவறி நடக்கும் ஒரு பெண்ணை வசைபாடுவதற்கான வார்த்தையாக இதை எந்தச் சலனமுமின்றி இங்கே கையாண்டிருப்பது எவ்வளவு அபத்தம்?

தமிழ் சினிமாவில் ‘லம்பாடி’ எனும் வார்த்தை இழிவுபடுத்தப்படுவதொன்றும் முதன்முறையல்ல. தெரிந்தோ, தெரியாமலோ ‘லம்பாடி’, ‘நாதாரி’ 'சண்டாளா' எனச் சாதிப்பெயர்களை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்த வடிவேலு உள்ளிட்டவர்களின் நகைச்சுவைக் காட்சிகளும் இங்கு பிரபலமே. இவையெல்லாம் அடிப்படையிலேயே தவறுதான் எனும் நிலையில், அவற்றைக் கை காட்டிவிட்டுத் தப்பித்துப் போய்விட முடியாது சீமராஜா. ‘வளரி’ வரைக்கும் போய் வரலாறு பேசுவதில் உள்ள கவனமெல்லாம் பிறகு இருக்கட்டும். அடிப்படையான இந்த விஷயத்தில் முதலில் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா? இதுகாறும் தூங்கிக்கொண்டு மட்டுமே இருந்த சென்ஸார் போர்டுகள் இப்போது குறட்டையே விடத் தொடங்கிவிட்டனவோ என நினைக்க வைக்கின்றன இவ்வகைக் காட்சிகள்.

யாரெல்லாம் கோட் அணியலாம்?

அந்தக் காட்சிதான் அப்படி எனப் பார்த்தால், இன்னொரு காட்சியில் இன்னொரு சமூகம் போகிறபோக்கில் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, படத்தில் நகைச்சுவைக் காட்சி(!) எனச் சொல்லப்படுகிற ஒரு காட்சியில், கோட் அணிந்திருப்பவரைப் பார்த்து, "குருவிக்காரய்ங்க கோட்டு போட்டுக்கிட்டுத் திரியிறாய்ங்க" எனும் தொனியில் ஒரு வசனம் வந்து விழுகிறது. கேட்ட மாத்திரத்தில் முகம் சுளிக்க வேண்டிய வசனம் அது. ஆனால், அதற்கு தியேட்டர்களில் சிலர் கைதட்டுகிறார்கள். இப்படி ஒரு மோசமான வசனத்திற்கும் வரவேற்பு இருக்கிறதென்றால் எவ்வளவு அபத்தமான சலனத்தைப் பார்வையாளர்களிடம் அந்த வசனம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பாருங்கள்.

இந்தக் காட்சியை வெறும் நகைச்சுவைக்காகத்தான் எனக் கூறிக் கடந்துவிட முடியாது. காரணம், இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிட்ட தனி நபர் சார்ந்தது மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குருவிக்காரர்களும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். குருவிக்காரர்கள் கோட் அணிவதில் பிரச்சினை என்றால் சீமராஜாவின் கூற்றுப்படி கோட்டுகளை இங்கே யார் யார் அணிய வேண்டும்? கோட்டுகள் யாருக்கானவை? ஒருவர் கோட் அணிவதற்கான தகுதியாக சீமராஜா குறிப்பிடுவதுதான் என்ன?

காலம்காலமாக நம் சமூகம் தனது பொதுப்புத்தியில், ‘குருவிக்காரர்களை’ எவ்வாறு சித்திரித்து வைத்திருக்கிறது என யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படியான சூழலில் இவ்வகையிலான அபத்த வசனங்கள்கூட மோசமான சலனங்களைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே பலவாறாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிற குறிப்பிட்ட அந்தச் சமூகத்தை மேலும் இழிவுபடுத்தும் விதமாக அமையாதா? சீமராஜாதான் பதில் சொல்ல வேண்டும்.

விடாத சாதிப் பெருமை

இப்படியாக விளிம்பு நிலைச் சாதியினரை வசைபாடியுள்ள இந்தப் படம் மற்றொரு வகையில், சமகால சாதியப் பிரச்சினைகளின் அடிநாதமாக எரிந்து வருகிற நெருப்புக்கு எண்ணெய் அல்ல, குடம்குடமாக எத்தனாலையே ஊற்றுவதாக அமைந்துள்ளது. ஆம்,“என்னதான் ஆள் பலம், அதிகார பலம், பணபலம்னு இருந்தாலும், அவங்ககிட்ட இருக்குற ராஜாங்கிற பட்டத்தை மட்டும் உங்களால வாங்க முடியாது” எனும் தொனியில் வரும் ஒரு வசனம் படத்தில் அடிக்கடி வருகிறது.

வில்லனை மட்டம் தட்டுவதற்கும் நாயகனைப் பெருமைப்படுத்துவதற்குமாக அந்த வசனம் காட்டப்பட்டுள்ளது. கதைப்படி மன்னர் பரம்பரையாகவும் ஜமீன் வாரிசாகவும் அந்தக் கதாநாயகன் சித்திரிக்கப்பட்டிருப்பதால் நாயகன் - வில்லன் ஆகிய பிம்பங்களிலிருந்து முற்றாக விலகி அப்பட்டமான ஆண்ட சாதி பெருமை பேசும் வசனமாகவே எதிரொலிக்கிறது. ஒருவரது மேன்மையென்பது அவர் பிறந்த குடியால் தீர்மானிக்கப்படுவது என்னும் ஆகப்பெரும் பிற்போக்குத்தனத்தை அடியொற்றியே அமையப்பெற்ற இந்த வசனத்தின் வாயிலாகச் சாதியக் கட்டுமானத்தை வலுவாகத் தாங்கிப் பிடிக்கும் வேலையையும் செவ்வனே செய்துள்ளது இந்தப் படம்.

தொடரும் துரத்துதல்கள்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதில் சம உரிமை கொடுக்கப்படுகிறதோ இல்லையோ அவர்களை மோசமாகச் சித்திரிப்பதில் மட்டும் நிச்சயமாக சம உரிமை உண்டு. அதில் இந்தப் படமும் விதிவிலக்கல்ல. கதாநாயகியைத் துரத்தி துரத்தி ஸ்டாகிங் செய்யும் கதாநாயகனைக் கதாநாயகி ஒருகட்டத்தில் சந்திக்கவே மறுக்கிறார். அதற்கு,“எத்தனை முறை பெண்களாகிய நீங்கள் எங்களை நிராகரித்தாலும் நாங்கள் உங்களைப் பின் தொடர்ந்துகொண்டேதான் இருப்போம்” எனும் தொனியில் பதில் சொல்கிறார் கதாநாயகன். மீண்டும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையையும் உதாரணமாகச் சொல்கிறார் (பாவம், இதற்கெல்லாம் தான் சுட்டப்படுவோம் எனத் தெரிந்திருந்தால் அந்த ஃபீனிக்ஸ் பறவையே உயிர்த்தெழுந்திருக்குமா எனத் தெரியவில்லை).

போதாக்குறைக்கு அதையொட்டி வரும் பாடலிலும் “பட்டுனு ஒட்டுற பொண்ணுங்க டக்கரு டக்கரு; சட்டுனு வெட்டுற பொண்ணுங்க மக்கரு மக்கரு” எனும் அபத்தமான வரிகள். ஆண்களின் பார்வையில், பெண்கள் எனப்படுபவர்கள் ஆண்கள் சொல்லும் காதலை எந்த மறுப்புமின்றி ஏற்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கும்வரை பின் தொடர்தல் தொடரும். அதையும் தாண்டி எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தப் பெண் ஒழுக்கம் கெட்டவள் அல்லது ஏமாற்றிவிட்டுச் சென்றவள் எனும் பட்டத்துக்குச் சொந்தக்காரர் ஆவார். தற்போது சமூகத்தில் பீடித்துள்ள வக்கிரங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கருத்தை அப்படியே நியாயம் செய்வதாகத்தான் அமைந்துள்ளன குறிப்பிட்ட அந்தக் காட்சிகள்.

இப்படியாக, சமகாலப் பிரச்சினைகளின் அடிநாதமாக இருந்துவரும் பிற்போக்குத்தனக் கூறுகளை வரவேற்கும் விதமாக அமைந்திருக்கும் இந்தப் படம், படைப்பாளிகளுக்கென தன்னளவில் இருக்க வேண்டிய, ஆனால் பொதுவாக இல்லாமல் போய்விட்ட, சமூக அக்கறையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon