மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

பாகிஸ்தானைப் பழிதீர்த்த வங்கதேசம்!

பாகிஸ்தானைப் பழிதீர்த்த வங்கதேசம்!

ஆசியக் கோப்பைத் தொடரின் நேற்றைய (செப்டம்பர் 26) ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முஷ்பிகுர் ரகுமான் 99 ரன்களில் ஆட்டமிழந்து 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்தின் மிரட்டலான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். இமாமும் 83 ரன்கள் சேர்த்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் வங்கதேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

2012ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வெறும் 2 ரன்களில் தோற்று வங்கதேசம் கோப்பையை இழந்திருந்தது. 6 ஆண்டுகள் கழித்து தற்போது வங்கதேசம் அந்தத் தோல்விக்கு பாகிஸ்தானைப் பழிதீர்த்துள்ளது.

2012ஆம் ஆண்டிலிருந்து அதிகமுறை ஆசியக் கோப்பை ஃபைனலில் இடம்பிடித்த அணியைப் பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் வருவது வங்கதேசம்தான். 2012லிருந்து அந்த அணி இதுவரை 3 இறுதிப் போட்டியை (இந்த தொடரையும் சேர்த்து) கண்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 2 ஃபைனலையும், இலங்கை 1 ஃபைனலையும் கண்டிருக்கின்றன.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வங்கதேச, இந்திய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வழக்கம் போல மாலை 5 மணிக்கு தொடங்கும்.

டி20 களின் ஆதிக்கத்தால் 300 ரன்களை மிகச் சாதாரணமாகக் கடக்கும் இன்றைய நவீன கிரிக்கெட்டிலிருந்து இந்தத் தொடர் சற்று வேறுபட்டே காணப்படுகிறது. இதுவரை இந்தத் தொடரில் நடைபெற்ற ஆட்டங்களில் ஒன்றில்கூட எந்த அணியும் 300 ரன்களைத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon