மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

எட்டு வழிச் சாலை: போராடுபவர்களைக் கைது செய்யக் கூடாது!

எட்டு வழிச் சாலை: போராடுபவர்களைக் கைது செய்யக் கூடாது!

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது எனக் காவல் துறையினருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச் சாலை திட்டத்துக்குத் தடை கோரி பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் எனப் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு கடந்த 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எட்டு வழிச் சாலை திட்டப் பணிகளின்போது பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்குகள், நேற்று (செப்டம்பர் 26) நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலத்தில், நேற்று காலை எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்திய 10க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டத்துக்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். உண்மையாகப் போராடுபவர்கள் யார், சட்டம் - ஒழுங்கு பாதிப்படையும் வகையில் போராடுபவர்கள் யார் என்கிற வித்தியாசத்தைக் காவல் துறையினர் அறிய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon