மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: போர்க் குற்றமும் அரசியல் குற்றமும்!

சிறப்புக் கட்டுரை: போர்க் குற்றமும் அரசியல் குற்றமும்!

தேவிபாரதி

கடந்த 25ஆம் தேதி ஆளும் அஇஅதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற கூட்டங்கள் அரசியல் ரீதியில் முக்கியமானவை. 2009இல் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னால் அப்போதைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் கை இருந்ததாகக் குற்றம் சுமத்தும் அதிமுக காங்கிரஸ் - திமுக மீது போர்க் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் இந்த நடவடிக்கை அடுத்த கோடையில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் நடவடிக்கை எனக் கருத முடியும். இறுதிப் போருக்குப் பிறகு நடைபெற்ற 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைபாடுகளை எடுத்துவந்தது. ஈழப் போருக்குப் பிறகு சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவளித்த அதிமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றில் ராஜபக்‌ஷே தலைமையிலான இலங்கை அரசுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் எதிராகப் போர்க் குற்ற நடவடிக்கை கோரும் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது.

அரசியல் பகடைக்காய்

காங்கிரசுடனான உறவை முறித்துக்கொண்ட பிறகு, காங்கிரஸ் திமுகவுடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு அதிமுக ஈழப் பிரச்சினையில் தனது முந்தைய நிலைபாடுகளை மாற்றிக்கொண்டது. அது தேர்தல்களில் அதிமுகவுக்குப் பெருமளவில் உதவியது என்றுகூடச் சொல்ல முடியும். 2014 மக்களவைத் தேர்தல் அறிவிப்பு தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை நினைவுகூர்ந்தால் அதிமுக ஈழப் பிரச்சினையை எப்படி அரசியல் ரீதியில் ஒரு வெற்றிகரமான பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது எனத் தெரியும். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவியதற்கும் அதிமுக வெற்றி பெற்றதற்குமான காரணிகளில் ஒன்றாக அந்தத் தீர்மானமும் கருதப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த காங்கிரஸ் அரசு, அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றதன் விளைவாக காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் ஈழ ஆதரவாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டன. அவர்களது வெறுப்பு தேர்தலில் எதிரொலித்தது.

கைகொடுத்த உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஈழப் பிரச்சினை சார்ந்து செய்வதற்கொன்றுமில்லாமல் இருந்த அதிமுகவுக்கு எழுவர் விடுதலை பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியான நேரத்தில் கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கும் பழனிசாமி தலைமையிலான அரசு, அதன் சாதகமான விளைவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறது. இறுதிப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான குற்றத்தில் காங்கிரசையும் தனது அரசியல் எதிரியான திமுகவையும் இணைப்பதற்கான அரசியலை ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்திருக்கிறது அதிமுக.

அதன் தொடக்கப் புள்ளியாகவே செப்டம்பர் 25 அன்று அதிமுகவின் சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களைக் கருத வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் அதிமுகவின் இந்தப் பொதுக்கூட்டங்களைக் கருத முடியும்.

கடந்த இரண்டாண்டுகளில் கட்சி சில பிளவுகளைச் சந்தித்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரிந்து சென்ற தினகரனிடம் அடைந்த தோல்வி, திமுக தலைவர் ஸ்டாலினால் முதல்வர் மீதும் துணை முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மீதும் முன் வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள், அரசின் நிச்சயமின்மைக்குக் காரணமாகியிருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கின் மீது வரவிருக்கும் தீர்ப்பு, தமிழக அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஜ மேற்கொண்டு வரும் விசாரணைகள், கைது நடவடிக்கைகள், மத்திய பிஜேபி அரசின் பினாமி அரசு என திமுக தலைவர் ஸ்டாலினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் என அதிமுக எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் அதிகம்.

எல்லாமே தன் கையை மீறிப் போய்க்கொண்டிருப்பதாக அதிமுக தலைமை நினைத்திருக்கக்கூடும்.

செப்டம்பர் 25ஆம் தேதி காங்கிரஸ் - திமுக மீது போர்க் குற்ற நடவடிக்கை கோரி நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் மேற்குறித்த எல்லா விவகாரங்களைப் பற்றியும்தான் பேசினார்கள்.

எடப்பாடியாரின் ஆவேசம்

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக ஆவேசமாகத் தென்பட்டார். ஈழப் போரை நடத்தியது காங்கிரசும் திமுகவும்தான் எனக் குற்றம் சுமத்திய முதல்வர், இறுதிப்போரின்போது - தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மெரினாவில் அண்ணா சமாதி அமைந்துள்ள வளாகத்தில் போர்நிறுத்தம் கோரி திமுக தலைவர் நடத்திய அரை நாள் உண்ணாவிரதப் போர் பற்றி விமர்சித்தார். அப்போதைய ஈழ ஆதரவாளர்களாலும் ஊடகங்களாலும் தமிழ் தேசிய இயக்கங்களாலும் தற்போதைய திமுகவின் அரசியல் நண்பர்களாலும் கருணாநிதியும் திமுகவும் எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டனர், எப்படியெல்லாம் வசைபாடப்பட்டனர் என்பதை நினைவூட்டினார். இவையெல்லாம் ஈழ ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படச் செய்யக்கூடியவைதான்,

ஆனால், சீக்கிரமே அந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதை முடித்துக்கொண்ட முதல்வர் கடந்த இரண்டாண்டுகளில் கட்சியின் மீதும் அரசின் மீதும் திமுக முன் வைத்துக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டார். தன் மீதும் தன் அமைச்சரவை சகாக்கள் மீதும் திமுக தலைவர் முன் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றார், கடந்த காலத்தில் திமுக எதிர்கொண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை நினைவூட்டியவர் திமுக ஊழலில் ஊறித் தளைத்த கட்சி என்றார். திமுக ஓர் அரசியல் கட்சியே அல்ல என்றவர், அக்கட்சியில் வேரூன்றியிருக்கும் வாரிசு அரசியல் பற்றிக் கடுமையாக விமர்சித்தார்.

கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்த முதல்வர் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவர் கருணாநிதி அதிமுகவை அழிப்பதற்கு மேற்கொண்டதாகத் தான் நம்பும் முயற்சிகளைப் பற்றி விவரித்தார். 1991 சட்டமன்றக் கூட்டத்தில் அவரது தலைவியும் மறைந்த முதல்வருமான செல்வி ஜெயலலிதா தாக்கப்பட்டதைப் பற்றிச் சொன்னபோது முதல்வர் உணர்ச்சிப் பிழம்பாகத் தென்பட்டார்.

தவிர, அதிமுக அரசின் சாதனைகளையும் கடந்த இரண்டாண்டுகளில் தனது அரசால் நிறைவேற்றப்படும் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றியும் விளக்கினார். பல தருணங்களில் திமுக தலைவர் ஸ்டாலினைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒருமையில் குறிப்பிட்டார். கருணாநிதி மரணத்தைத் தொடர்ந்து ஓரிரு வாரங்கள் வரை கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் நாகரிகத்தை முதல்வர் காற்றில் பறக்க விட்டார் என்றுகூடச் சொல்லலாம்.

தினகரனைக் கண்டு அச்சமா?

குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைக் குறி வைத்துத் தாக்கினார். வேறு பல அமைச்சர்களின் தாக்குதல்களுக்கும் உள்ளானார் தினகரன்.

ஒரு கணக்கில் பார்த்தால் அதிமுக தலைமை, திமுக - காங்கிரஸ் கூட்டணியைக் கண்டு பதற்றமடைந்திருப்பதைவிட தினகரனைக் கண்டே அதிகம் பதற்றமடைந்திருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களையும் திமுகவையும் தோற்கடித்துத் தங்கள் அம்மாவின் சொந்தத் தொகுதியைக் கைப்பற்றியது மட்டும் காரணம் எனச் சொல்ல முடியாது.

கடந்த ஓரிரு மாதங்களாக தினகரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணங்கள் ஆளும்கட்சிக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சுற்றுப்பயணங்களின்போது தினகரனைப் பார்ப்பதற்காகவும் அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் கூடும் பெருமளவிலான கூட்டங்கள் நிச்சயமாகப் பதற்றத்தை ஏற்படுத்துபவை என்பதில் சந்தேகமில்லை. கூட்டங்களில் தினகரன் தற்போதைய அதிமுக தலைமையின் மதிப்பை மோசமாகச் சீர்குலைக்கும் விதங்களில் பேசுகிறார். முதல்வரையும் துணை முதல்வரையும் துரோகிகள் என விமர்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்துள்ள முதல்வர் பதவி தனது சின்னம்மா போட்ட பிச்சை என விமர்சிக்கிறார் தினகரன்.

அவரிடம் பணம் இருக்கிறது. அவரது கூட்டங்களுக்குச் செலவிடப்படும் தொகை மலைக்க வைக்கிறது. அரசியலில் முன்னிலை பெறுவதற்குப் பணபலத்தை நம்பியிருக்கும் தினகரனை எதிர்கொள்வதற்கு அதிமுகவும் திமுகவும் திணற வேண்டியிருக்கும் என்பது ரகசியமல்ல. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு அமையக்கூடுமானால் அது அதிமுகவுக்குப் பெரும் நெருக்கடி.

ஆக, ஈழத் தமிழர் படுகொலை, போர்க் குற்றம் சார்ந்த சொல்லாடல்களை முன்னிறுத்தி, அரசியல் ரீதியில் தன்னைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகளிலிருந்து மீள அதிமுக விரும்புகிறது என்றே தோன்றுகிறது. காங்கிரசின் தேர்தல் கூட்டாளியான திமுகவின் பலவீனமான அம்சங்களில் ஒன்றாக ஈழப் போரை முன்னெடுக்க முற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதை முன்னெடுப்பதன் மூலம் உணர்ச்சிகரமான அடையாளம் ஒன்றைக் கட்டமைக்க முற்பட்டிருக்கிறது. அதன் வழியே மக்களவைத் தேர்தலைச் சந்திக்க முயல்கிறது.

மக்களவைத் தேர்தல் வரை இலங்கைப் பிரச்சினையைத் தக்கவைத்திருக்க முடியாது என்பதை அதிமுக உணர்ந்தே இருக்கும். எனவே அது இதுபோன்ற உணர்ச்சிகரமான பிரச்சினைகளை அடுத்தடுத்து எழுப்பும் என எதிர்பார்க்கலாம்.

(கட்டுரையாளர்: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என்.கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected])

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon