மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

வாராக் கடன் குறைந்து வருகிறது: ஜேட்லி

வாராக் கடன் குறைந்து வருகிறது: ஜேட்லி

அரசின் நடவடிக்கைகளால் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் குறைந்து வருவதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் செப்டம்பர் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடையே பேசுகையில், “கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. வங்கிகள் வழங்கும் கடன்களில் பெரும்பாலான கடன்கள் வாராக் கடன்களாக முடங்கிவிடுகின்றன. ஆனால், அரசு தரப்பிலிருந்து வங்கி திவால் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு செயல்படா சொத்துகளின் அளவு குறைந்து, வங்கிகளின் வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் மேம்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருப்பதோடு, இந்தியாவில் நுகர்வுத் திறனும் மேம்பட்டுள்ளது. இதனால் வங்கிச் செயல்பாடுகள் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன” என்றார். நிதிச் சேவைகள் துறை செயலாளரான ராஜீவ் குமார் பேசுகையில், “வங்கி திவால் சட்டம் மற்றும் சில சீர்திருத்த நடவடிக்கைகளால் நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் வாராக் கடன்களில் ரூ.1.8 லட்சம் கோடி வரையில் திரும்ப வசூலிக்கப்படும். தற்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிகளின் கடன் வளர்ச்சி, சொத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் இந்த ஆண்டில் ரூ.18,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்கவும் வங்கிகள் திட்டமிட்டுள்ளன” என்று கூறினார்.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon