மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

நீதிமன்ற நேரலை: உச்ச நீதிமன்றம் அனுமதி!

நீதிமன்ற நேரலை: உச்ச நீதிமன்றம் அனுமதி!

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலைச் செய்வதன் மூலமாக, அதன் மீதான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும், முக்கியமான வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்பவும் வேண்டுமென்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சட்ட மாணவர் ஸ்நேகில் திரிபாதி மற்றும் அரசு சாரா அமைப்பான சென்டர் ஃபார் அக்கவுண்டபிலிட்டி அண்ட் சிஸ்டமிக் சேஞ்ச் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த விளக்கத்தைக் கோரியது உச்ச நீதிமன்றம். இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி நடந்த விசாரணையின்போது ஆஜரானார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால். அப்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்பும் திட்டம் உள்ளதாகக் கூறினார். 70 நொடிகள் தாமதமாக இதனை ஒளிபரப்பலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று (செப்டம்பர் 26) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற அறையில் என்ன நடக்கிறது என்று அறியும் உரிமை மக்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தனர் நீதிபதிகள். சூரிய ஒளியே சிறந்த கிருமிநாசினி என்று கூறி, தங்களது தீர்ப்பை வழங்கினர். நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலைச் செய்யலாம் என்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள், அதனை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கலாம் என்றும் அறிவித்தனர்.

“நீதிமன்ற நடைமுறைகளை நேரலைச் செய்வதன் மூலமாக, நீதி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகமாகும். மனுதாரர்கள் தங்களது வழக்கு எவ்வாறு வாதாடப்படுகிறது என்பதை இதன் மூலமாக அறிய முடியும்” என்று தெரிவித்தார் நீதிபதி தீபக் மிஸ்ரா. பாலியல் பலாத்காரம் மற்றும் திருமண பந்தம் குறித்த வழக்குகளை மட்டும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டுமென்று கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக, சட்ட மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon