மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: கலைஞர் தலைவராக உருவான கதை – 5

சிறப்புக் கட்டுரை: கலைஞர் தலைவராக உருவான கதை – 5

ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

(தி இந்து நாளிதழின் வாசகர்களின் ஆசிரியராக (Readers’ Editor) பணியாற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த நூலின் சுருக்கமான வடிவத்தை ஃப்ரன்ட்லைன் இதழ் வெளியிட்ட கலைஞர் சிறப்பிதழில் (ஆகஸ்ட் 31) அவர் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைக் குறுந்தொடராக மின்னம்பலத்தில் வெளியிடுகிறோம். தொடரின் இறுதிப் பகுதியான இந்தக் கட்டுரை கருணாநிதியின் திரையுலகப் பிரவேசம், அண்ணா – பெரியாரிடையே ஏற்பட்ட முரண்கள், முரசொலியின் மறு பிறப்பு, கருணாநிதி சென்னைக்கு வந்தது ஆகியவற்றைக் கூறுகிறது – ஆசிரியர்)

இறுதி நாட்கள் என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை கருணாநிதி முரசொலியில் எழுதினார். பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த சுயநலம் கொண்ட ஒரு சிறு குழு இயங்குவதாகவும், அதைப் பெரியார் அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமெனவும் கருணாநிதி எழுதியிருந்தார். இது நெருக்கடியை மேலும் அதிகரித்தது. திராவிடர் கழகத் தொண்டர்கள் முரசொலி பிரதிகளைப் பல்வேறு இடங்களில் எரித்துப் போராட்டம் செய்தனர். இதனால் முரசொலிக்கு எதிராகப் பிரச்சாரமும் நடந்தது.

மூன்று இதழ்கள் வரையிலும் கடனுக்கு அச்சடித்துத்தர அச்சக உரிமையாளர் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், முரசொலியை விற்ற பணத்தைக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. உள்ளூர் முகவர்கள் முதல் மாநில அளவிலான முகவர்கள் வரை அனைவருமே விற்ற பணத்தைச் சரியாகத் தரும் பழக்கம் இல்லாதவர்கள். முரசொலியைத் தொடர்ந்து நடத்துவதற்காக குண்டலகேசி என்னும் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு மந்திரிகுமாரி என்னும் நாடகத்தை எழுதினார். இது வெற்றி பெற்றது.

இதற்கிடையே கோயம்புத்தூரில் எழுதத் தொடங்கி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவின் தூக்கு மேடை நாடகத்தையும் எழுதி முடித்தார். இந்த நாடகம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பியது. பழைய தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட மந்திரி குமாரியைப் போலல்லாமல், இந்த நாடகத்தில் முற்போக்கு அம்சங்களை திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்திட்டத்துடன் இணைத்து எழுதினார்.

‘கலைஞர்’ பட்டம் பெற்ற தருணம்

இந்த நாடகத்தின் இறுதிக் காட்சியில் தூக்கு மேடையிலிருந்து கதாநாயகன் பேசுவான். அந்தக் காட்சியில் திராவிடர் கழகத்தின் சீர்திருத்தக் கொள்கைகள் மட்டுமின்றி பகத்சிங்கின் வாழ்க்கையும், மரணமும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும். இந்த நாடகம் தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் அரங்கேறியது. கருணாநிதியின் தொடக்க கால அரசியல் வழிகாட்டியான பட்டுக்கோட்டை அழகிரி இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டுக் கருணாநிதிக்குக் கலைஞர் எனப் பட்டம் சூட்டினார். அடுத்த பத்தாண்டுகளில் கலைஞர் என்பதுதான் அவருடைய முதல் பெயர் என்று ஆனது.

அண்ணாதுரை, பெரியாருக்கு இடையிலான முறிவு மட்டுமே கருணாநிதிக்கு நெருக்கடியை அளிக்கவில்லை. அவருடைய மனைவி பத்மாவின் உடல்நிலை படிப்படியாகக் குன்றி கவலைக்கிடமானார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இறந்தும் போனார். தன்னுடைய சுயசரிதையில் மிகுந்த மனவலியுடன் பத்மாவின் இறுதி நாட்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வசதியற்ற, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் அவர் இருந்த இந்தக் காலகட்டத்தை அவருடைய வாழ்வின் மிக பலவீனமான தருணம் என்று சொல்ல வேண்டும். தனது பெற்றோருக்கும், முதல் மனைவிக்கும் எதையும் செய்ய இயலாமல் போன தன்னுடைய நிலையைப் பற்றி அவர் இறுதிவரை வருந்தியுள்ளார்.

கொந்தளிப்பான காலகட்டம்

கருணாநிதியின் ஆட்சி நிர்வாகத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய சமூக நலத் திட்டங்களுக்கான உந்துதல் 1947 முதல் 1949 வரையிலான அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே கிடைத்தது என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் (1970களில்) வருவாய்த் துறை செயலாளராக இருந்தவரும் 1989 முதல் 1991 வரையில் பொருளாதார ஆலோசகராக இருந்தவருமான எஸ்.குகன், பல முறை சொல்லியிருக்கிறார்.

கருணாநிதிக்கு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பெரிதும் நிச்சயமற்ற காலமாக அது இருந்தது. பெரியாருக்கும், அண்ணாதுரைக்கும் இடையிலான பிளவு அதிகரித்துவந்தது. இரண்டு பெரிய தலைவர்களுக்கு இடையிலான வேறுபாட்டால், இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரிதும் சங்கடமடைந்தார்கள். பெரியார் மீதான மரியாதை ஒருபுறம், அண்ணாவின் நுட்பமான அரசியல் புரிதலால் திறக்கப்பட்ட பல்வேறு சாத்தியக்கூறுகள் மறுபுறம் என்று அவர்கள் தடுமாறினார்கள்.

பத்மாவின் மரணம், மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் மாறிவந்த காங்கிரஸ் தலைமையின் இயல்பு, பெரியார் - அண்ணாவுக்கு இடையில் அதிகரித்த பிளவு, திராவிட இயக்கத்தின் பிளவைப் பயன்படுத்திக்கொண்டு, அவ்வியக்கம் உருவாக்கிய தீவிரமான சூழலைக் கைப்பற்றிக்கொள்வதற்கான இடதுசாரிகளின் முயற்சி, வலுவான ஊடகமாக உருபெறுவதில் முரசொலியின் தோல்வி, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை, தாயில்லாத குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவை கருணாநிதியைப் பெரிதும் அலைக்கழித்தன.

கருணாநிதி இவை எல்லாவற்றுக்கும் ஒவ்வொன்றாகத் தீர்வு காணத் திட்டமிட்டார். குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும், குடும்பத்தைப் பராமரிப்பதில் உதவி செய்வதற்கும் மறுமணம் செய்துகொள்ளக் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதனைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டார். இயக்க உறுப்பினரான தட்சிணாமூர்த்தியின் தங்கை தயாளுவைத் திருமணம் செய்துகொண்டார்.

திமுகவின் உதயம்

இந்தியைத் திணிப்பதில் காங்கிரஸ் ஆட்சி கொண்டிருந்த உறுதிப்பாடு எதிர்பாராததொரு சாதகமான விளைவை ஏற்படுத்தியது. இது பெரியாரையும், அண்ணாதுரையையும் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகளைக் களைந்து மொழி மேலாதிக்கத்தைத் தகர்க்க இணைந்து செயல்பட உதவியது. 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோட்டில் மாநில மாநாடு ஒன்றை பெரியார் ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குமாறு அண்ணாவைக் கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில்தான் கருணாநிதியின் தூக்குமேடை நாடகமும் அங்கே மேடையேற்றப்பட்டது. இரண்டு நாள் மாநாடு சமரச முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி நடக்காமல், நிலைமை மேலும் மோசமானது.

திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான பத்திரிகையான விடுதலையில் அண்ணாதுரை சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொள்கிறார் என்று பெரியார் எழுதினார். தனக்கு எதிராக அன்பழகனையும், கருணாநிதியையும் அவர் தூண்டிவிடுவதாகப் பெரியார் கூறினார். இனிமேல் கழகத் தொண்டர்கள் கருணாநிதியையும் அன்பழகனையும் பொதுக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என்றும் அறிவித்தார்.

பொதுக் கூட்டங்கள் இல்லை என்றான பின், கருணாநிதி மீண்டும் திரைக்கதை எழுதச் சென்றார். எம்ஜிஆர், ஜானகி நடிக்கும் மருத நாட்டு இளவரசி படத்துக்கு திரைக்கதை எழுதக் கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். வடசென்னையில் உள்ள ஒரு சிறிய விடுதியில் (நாடார் மேன்ஷன்) தங்கித் திரைக்கதை எழுதினார். மூன்று வாரங்களில் முழுக் கதையையும் எழுதிவிட்டு திருவாரூருக்குத் திரும்பிச் சென்றார். 1949ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் பெரியார் மணியம்மையை திருமணம் செய்துகொண்டார்.

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாதுரை தொடங்கினார். பொது அமைப்பு, நிர்வாகம், சட்ட திட்டங்கள், நிதி மற்றும் பிரச்சார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு முழுமையான அரசியல் கட்சியாக திமுக உருவெடுத்தது. கட்சியின் பிரச்சாரக் குழுவின் உறுப்பினராகக் கருணாநிதி நியமிக்கப்பட்டார். அன்று மாலை சென்னை ராபின்சென் பூங்காவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சி முறையாகத் தொடங்கப்பட்டது.

கருணாநிதியின் ஆளுமை விகாசம்

இடைப்பட்ட காலத்தில், திரைப்படப் பணி நிமித்தமாக மீண்டும் திருவாரூரிலிருந்து வெளியேறினார் கருணாநிதி. இம்முறை சென்றது சேலம் மாடர்ன் தியேட்டருக்கு. இதற்குப் பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதால் கருணாநிதி மீண்டும் சென்னைக்கு வந்தார். திமுகவில் இயங்கிக்கொண்டே திரைப்படத்துக்கு எழுதுவதைத் தொடருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதே ஆண்டில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மருதநாட்டு இளவரசியும் மந்திரி குமாரியும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாகின. இதனால் தயாரிப்பாளர்கள் கருணாநிதியைத் தேடி வந்தார்கள். இயக்க அமைப்புத் திறனாலும், தமிழகத்தின் மூலை, முடுக்கெல்லாம் மேற்கொண்ட ஓய்வற்ற பயணங்களாலும் கருணாநிதி தொண்டர்களின் அன்புக்குரியவராக மாறினார். அண்ணாவிடம் தாங்கள் தெரியப்படுத்த வேண்டிய கருத்துகள், யோசனைகள், மன வருத்தங்கள் ஆகியவற்றை அவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பாலமாகவும் கருணாநிதியைத் தொண்டர்கள் கருதினார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன் சொன்னபடி திரைத்துறை, கட்சி இரண்டு பணிகளையும் கருணாநிதி திறமையாகக் கையாண்டார். சென்னை வந்ததிலிருந்து தனது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அம்சமான நேர மேலாண்மையைச் சிறப்பாக வகுத்துக்கொண்டார். அதிகாலையில் எழும் பழக்கம் கொண்ட கருணாநிதி, தனது எழுத்துப் பணிகளைக் காலை உணவுக்கு முன்பாகவே முடித்துக்கொள்வார். கட்சித் தொண்டர்கள் வருவதற்கு முன்பே இந்தப் பணிகள் முடிந்துவிடும்.

அசாத்தியமான திறமை, கட்டுப்பாடு, சிறந்த பணி நெறிமுறைகள் ஆகியவற்றால் கருணாநிதியால் எண்ணற்ற பணிகளைச் செய்ய முடிந்தது.

அசாத்தியமான ஆளுமைப் பண்புகள்

கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி சென்னையில் அவர்கள் குடும்பத்தின் தொடக்க காலத்தைப் பற்றிக் கூறுகையில், “நீண்ட காலத்திற்குப் பிறகு கீழ்மட்ட நடுத்தர வர்க்கம் என்ற நிலையிலிருந்து வெளியே வந்தோம். தலைவர் வேலை செய்யும் விதம்தான் எங்களுக்கு உத்வேகமூட்டும். தனது ஆளுமையின் எந்த ஓர் அம்சமும் பிற அம்சம் எதையும் அமுக்கிவிட அவர் அனுமதித்ததேயில்லை. ஒரே நேரத்தில் எழுத்தாளர், அரசியல் தலைவர், திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய உரையாசிரியர், சிறந்த பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், நல்ல தந்தை, சிறந்த சகோதரன் எனப் பலவிதங்களில் பொறுப்புடனும் சிறப்புடனும் செயல்பட்டவர். இவை எல்லாவற்றுக்கும் நேரத்தை உருவாக்கி, சிறப்புக் கவனம் செலுத்தியும் வந்தார். இந்தக் குணங்கள்தான் கட்சியின் மிகச் சிறந்த அமைப்பாளராக இவரை உருவாக்கியது. அவர் எப்போதுமே தனக்குச் சொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகவே வேலை செய்தார். அண்ணாதான் தலைவருக்கு முன்னோடி. ஆனால், கட்சியின் உள்கட்டமைப்பை வலுவாகக் கட்டமைத்ததன் மூலம், அண்ணா தன் இலக்குகளை அடையத் தலைவர் உதவினார்” என்றார்.

எதையுமே வேலையாகவோ அல்லது சுமையாகவோ கருதாததால் கருணாநிதி அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்தினார் என்று மாறன் குறிப்பிட்டார். எல்லாப் பணிகளையும் ஒரு மகிழ்ச்சிகரமான பயிற்சியாகவே அவர் கருதியதாக மாறன் கூறினார். மேலும், “அவர் எல்லாவற்றையும் பற்றி ஆர்வம் காட்டிக்கொண்டே இருந்தார். தனது பொறுப்பு எதையுமே எளிதாக எடுத்துக்கொள்ளாமல் ஈடுபாட்டுடன் செயல்பட்டது அவரது பொது ஆளுமையைக் கட்டமைக்க உதவிய முக்கியமான அம்சங்களில் ஒன்று. தன் உரைகளை எப்போதும் அவரே தயாரிப்பார். அவருடைய எழுத்துகளுக்கு அவரே பிழை திருத்துநர். படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று, அவரது திரைக்கதையில் மாற்றம் செய்து மேம்படுத்துவார். அறிவைத் தேடுவதில் தணியாத தாகம் கொண்ட மாணவராக எப்போதும் விளங்கினார். அவர் என்னுடைய மாமா மட்டுமல்ல. என் ஆசிரியர். தகவல்களை வெறுமனே திரட்டுவதோடு நில்லாமல் எந்தத் தகவலையும் பரந்துபட்ட சமூக – அரசியல் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் அறிஞராக இருக்க வேண்டும் என்பது அவர் எனக்குக் கற்றுக்கொடுத்த சிறந்த பாடங்களில் ஒன்று” என்றார் மாறன்.

1957ஆம் ஆண்டில் தேர்தல் அரசியலுக்குள் நுழைய திமுக முடிவெடுத்தபோது, கருணாநிதியின் இந்த குணாதிசியங்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. சித்தாந்தத்திற்கான உறுதியான அடித்தளம், தொண்டர்களைத் திரட்டுவதற்கான வழிமுறைகள், இயக்கத்தைக் கட்டியமைக்கும் திறன் ஆகிய கருணாநிதியின் மகத்தான ஆளுமைப் பண்புகள் அவரது வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்தன.

(நிறைவு)

தொடரின் முதல் பகுதி

தொடரின் இரண்டாம் பகுதி

தொடரின் மூன்றாம் பகுதி

தொடரின் நான்காம் பகுதி

நன்றி: ஃப்ரன்ட்லைன்

தமிழில்: பிரகாசு

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon