மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

பிழை, பெரும் பிழை, மாபெரும் பிழை!

பிழை, பெரும் பிழை, மாபெரும் பிழை!

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய முன்தின ஆட்டம் ஆசியக் கோப்பை வரலாற்றில் சமனில் முடியும் முதல் ஆட்டமாகவும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சமன் செய்யும் ஆட்டமாகவும் பதிவானது.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 ஆட்டம் கடைசி நிமிடம்வரை த்ரில்லாகச் சென்று சமனில் முடிவடைந்தது. பரபரப்பான இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது ஒருபுறம் இருந்தாலும், இது அப்படி முடிந்திருக்க வேண்டிய அவசியமில்லாத போட்டி என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தும் அவையனைத்தும் சிலர் செய்த தவறுகளால் வீணடிக்கப்பட்டன. இப்படி மூன்று முக்கியமான தவறுகளைப் பட்டியலிடலாம்.

அந்தப் பட்டியலில் முதலாவதாக வருபவர் தொடக்க வீரர் கே.எல்.ராகுல். சிறிய இடைவெளிக்குப் பின் இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்பிய இவரது ஆட்டம் நேற்றைய முன்தினப் போட்டியில் சிறப்பாகவே இருந்தது. பேட்டிங்கில் எந்தக் குறையும் கூற முடியாது. 66 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ரஷீத் கான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். சந்தேகத்துக்கு இடமின்றி அது அவுட் என தெளிவாகத் தெரிந்திருந்தும் ராகுல் அதை விடாமல் அம்பயரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார். இப்படித்தான் இந்தியாவின் ஒரே ரிவ்யூ வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

இரண்டாவது காரணமாகச் சொல்லப்பட வேண்டியவர்கள் போட்டியின் நடுவர்கள். இந்தப் போட்டியில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் நடுவர்களின் தவறான முடிவாலேயே வெளியேற்றப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிரேகோரி பிராத்வெய்ட், வங்கதேசத்தின் அனிசூர் ரஹமான் ஆகியோரது தீர்ப்புகள் ரீப்ளேயில் அவுட் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தன. இருப்பினும் இந்த முடிவை எதிர்த்து இந்திய வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் இருந்த ஒரு ரிவ்யூ அப்பீலும் ராகுலால் வீணடிக்கப்பட்டுவிட்டது.

இந்திய விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து விழுந்ததால் அடுத்து வந்த வீரர்களுக்கு நெருக்கடி அதிகமானது. நெருக்கடியை எதிர்கொள்ளத் திணறி கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் இருவரும் தேவையின்றி ரன்-அவுட் ஆகி வெளியேறினர். மறுமுனையில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் அணிக்குத் திரும்பிய ஜடேஜா கடைசி ஓவர் வரை போராடினார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன.

அந்த ஓவரில் ஜடேஜா அடித்த இரண்டாவது பந்து சிக்ஸராக இருந்தபோதும் நடுவரின் தவறால் பவுண்டரியாக அது அறிவிக்கப்பட்டது. அடுத்த பந்தில் ஜடேஜா ஒரு ரன் அடித்து, அறிமுக வீரரான கலீல் அஹமது மீது நெருக்கடியைப் புகுத்தினார். இருப்பினும் கலீல் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து மீண்டும் ஜடேஜாவிடம் ஸ்ட்ரைக்கை வழங்கினார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஜடேஜா நினைத்திருந்தால் அடுத்த பந்தை இரண்டு ஃபீல்டருக்கு நடுவில் தட்டிவிட்டு சிங்கிள் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. சிக்ஸருக்கு ஆசைப்பட்டு பந்தை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்து நஜிபுல்லாவுக்கு எளிய கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் இந்திய அணியால் 2 பந்துகளில் 1 ரன் அடிக்க முடியாமல் போனது.

ஆரம்பத்தில் ரிவ்யூ அப்பீலை வீணடித்து ராகுல் செய்தது பிழை என்றால், நடுவர்கள் தவறான முடிவுகளை வழங்கியது பெரும் பிழை. கடைசியாக எளிதில் முடிக்கப்பட வேண்டிய போட்டியில், சிக்ஸர் அடிக்க முற்பட்டு ஜடேஜா செய்தது மாபெரும் பிழை. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாதது ஒரு குறையாக இருந்தாலும், எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியைச் சமன் செய்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

- முத்துப்பாண்டி யோகானந்த்

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon