மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

ஹெச்.ராஜாவுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக ஆதரவு!

ஹெச்.ராஜாவுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக ஆதரவு!

ஹெச்.ராஜாவுக்கு எதிராக அறநிலையத் துறை ஊழியர்கள் நடத்தவுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பப் பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக ஹெச்.ராஜா மீது பல இடங்களில் புகார் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் தொடர்கிறது. ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று அறநிலையத் துறை ஊழியர்களின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (செப்டம்பர் 26) ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறநிலையத் துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் தரக்குறைவாகவும், அவர்களது குடும்ப பெண்கள் குறித்து அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசிய ஹெச்.ராஜாவை, இதுவரை தமிழகக் காவல் துறை கைது செய்யாமல் பாரபட்சமான முறையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதும், அதிமுக அரசு, இதுபோன்ற இழிவான பேச்சுகளை ஆதரித்து, மேலும் அநாகரிகமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் ராஜா மேடை போட்டு அலட்சியமாகப் பேசுவதற்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து, அதற்குப் பாதுகாப்பும் வழங்கி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

“ஹெச்.ராஜா பேசி வருவதும், சமூக அமைதியைக் குலைத்திடும் அத்தகைய செயல்களை மத்திய - மாநில பாஜக மனப்பூர்வமாக ஆதரித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ள அவர், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திமுக அரசு கொண்டு வந்த முற்போக்கான சட்டத்தை எதிர்ப்பவர்கள், ஒருபோதும் திருக்கோயில்களின் பாதுகாவலர்கள் என்று பொய் வேடம் போட முடியாது என்பதை உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்திப் பேசிவரும் பாஜக தேசியச் செயலாளர் ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்; இந்து சமய அறநிலையத் துறையில் ஒரு சுமுகமான நிர்வாகப்பணிச் சூழல் ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுத்து, அறநிலையத் துறை ஊழியர்கள் மத்தியில் ஆறுதலையும் அமைதியையும் நம்பிக்கையையும் தோற்றுவிக்க வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon