மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி சம்பாதித்த அம்பானி

நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி சம்பாதித்த அம்பானி

கடந்த ஓராண்டில் முகேஷ் அம்பானி ஒரு நாளைக்கு ரூ.300 கோடியைச் சம்பாதித்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.300 கோடி உயர்ந்துள்ளதாக பர்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,71,000 கோடியாக உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக முகேஷ் அம்பானி தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கின் விலை 45 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அம்பானிக்கு அடுத்த இடங்களில் எஸ்.பி.ஹிந்துஜா & ஃபேமிலி (ரூ.1,59,000 கோடி), எல்.என்.மிட்டல் & ஃபேமிலி (ரூ.1,14,500 கோடி), அசிம் பிரேம்ஜி (ரூ.96,100 கோடி) ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட அம்பானியின் சொத்து மதிப்பு உயர்வாக உள்ளது. ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் பட்டியலைக் கொண்டு பர்க்லேஸ் நிறுவனம் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 617ஆக இருந்தது. 2018ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 831 ஆக உயர்ந்துள்ளது.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon