மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: போலிச் செய்திகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

சிறப்புக் கட்டுரை: போலிச் செய்திகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

மா.முருகேஷ்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக உள்ள ஒரு விஷயம் போலிச் செய்திதான். எங்கோ இருந்து பரப்பப்படும் ஒரு போலியான தகவல் மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதைப் பார்த்து வருகிறோம்.

வாட்ஸ் அப்பில் ஒரேயொரு பொய்ச் செய்தியைப் பரப்புவதன் மூலம் மக்களிடையே மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சமீபத்திய இரண்டு உதாரணங்கள் உள்ளன. முதலாவது வடக்கு மாநிலங்களில் நடந்தது. பசு கடத்தல் சம்பவம் தொடர்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட செய்திகள் பலரின் உயிரை பலி வாங்கியது.

இரண்டாவது தமிழகத்தில் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு பரப்பப்பட்ட ‘வடமாநிலத்தவர்களால் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்’ என்ற செய்தியால் திருவண்ணாமலையில் ருக்மணி அம்மாள் என்ற சென்னைப் பெண்மணி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பல மாவட்டங்களிலும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இது போன்று எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம்.

போலிச் செய்திகள் ஏன் பரப்பப்படுகின்றன?

பெரும்பாலும் ஏதோ ஒரு தரப்பின் லாபத்துக்காகவோ அல்லது மற்றொரு தரப்பின் நஷ்டத்துக்காகவோ போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. சில சமயம் விளையாட்டுத்தனமாகவும் பரப்பப்படுகின்றன.

ஒரு குளிர்பான நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த நிறுவன ஊழியர் ஒருவருக்கு எய்ட்ஸ் உள்ளதாகவும் அவரது ரத்தம் குளிர்பானத்தில் கலந்துவிட்டதாகவும் அந்தக் குளிர்பானத்தை யாரும் பருக வேண்டாம் என்றும் ஒரு வதந்தி வாட்ஸ் அப்பில் நீண்ட காலமாகவே பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமலேயே நாமும் மற்றவர்களுக்கு அதை ஷேர் செய்துவிடுகிறோம். இதில் நேரடி நஷ்டம் அந்தக் குளிர்பான நிறுவனத்துக்கு. மறைமுக லாபம் அதன் போட்டியாளர்களுக்கு.

இதேபோல் மதம், சாதி ஆகிய உணர்வுபூர்வ விஷயங்கள் சார்ந்தும் போலிச் செய்திகள் பரப்பப்படுவதுண்டு. இதில், குற்றம்சாட்டப்படும் கட்சிகள் அல்லது அமைப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன. பரப்புபவர்களின் கட்சி அல்லது அமைப்பு லாபமடையலாம்.

நையாண்டியாகவும், தலைவர்களைப் பகடி செய்யும் விதமாகவும்கூட அண்மைகாலமாகப் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. தலைவர்கள் சொல்லாததைப் பிரபலமான ஊடகங்களின் லோகோவோடு அவர்கள் சொன்னது போன்று ‘போட்டோஷாப் திருத்தம்’ செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுபவை இந்த வகையைச் சேர்ந்தவை.

கடந்த மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றது. அந்நேரத்தில் புதிது புதிதாகச் செய்திதளங்கள் முளைத்தன. குறிப்பிட்ட ஒரு கட்சியைப் புகழ்ந்தோ அல்லது இழந்தோ செய்திகள் பரப்பப்பட்டன. நாட்டிலேயே முதன்முறையாகக் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் போலிச் செய்திகளைத் தடுக்கத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தலைமைத் தேர்தல் ஆணையமே அறிவிக்கும் அளவுக்குப் போலிச் செய்திகள் பரவியிருந்தன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு இந்தச் செய்திதளங்கள் காணாமல் போயின. இது தொடர்பாக தேர்தலுக்குப் பின் காணாமல் போன போலிச் செய்திதளங்கள் என்ற பெயரில் மின்னம்பலத்தில் கட்டுரை வெளியானது.

போலிச் செய்திகளுக்கு எதிரான போர்

போலிச் செய்தியைக் கட்டுப்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களும் கூகுள் தேடுபொறியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தவறான செய்திகளையும் வதந்திகளையும் பகிர வேண்டாம் என்று தனது பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் 10 அறிவுரைகளை வழங்கியிருந்தது. இதேபோல், ஒரே நேரத்தில் பலருக்கு ஷேர் செய்வதைத் தடுக்க, ஐந்து பேருக்கு மேல் ஷேர் செய்ய முடியாது என்ற கட்டுப்பாட்டையும் வாட்ஸ் அப் கொண்டுவந்தது. இதுபோல் ஃபேஸ்புக் நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஊடகங்கள் மூலம் பரவும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக 200 ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பது என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தமாக 8,000 ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சியளிப்பது என்பது கூகுளின் இலக்கு.

சென்னையில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பை ஃபர்ட்ஸ் டிராஃப்ட் நியூஸ், பூம்லைவ், இன்டர்நியூஸ் ஆகிய ஊடக நிறுவனங்களுடன் இணைந்து அண்மையில் கூகுள் நடத்தியது. மேற்கூறிய நிறுவனங்கள் அனைத்தும் ஒரு செய்தி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஆய்வு செய்வதில் தேர்ச்சி பெற்றவை. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்வது எப்படி, அவை எங்கு எடுக்கப்பட்டன, எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டன என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி என நான்கு நாட்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், போலிச் செய்திகளின் எண்ணிக்கை பிரமிக்கத்தக்க வகையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய நிபுணத்துவம் தேவை. அதற்காகவே இந்த வகுப்பு எனத் தெரிவிக்கப்பட்டது.

புகைப்படத்தை ஆய்வு செய்வது ஏன் அவசியமாகிறது?

பெரும்பாலான போலிச் செய்திகள் புகைப்படமாகவே பகிரப்படுகின்றன. வடமாநிலங்களில் எங்கோ நடந்த ஒரு வன்முறையைத் தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை எனக்கூறி சாதி, மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, ஒரு சம்பவம் நடைபெற்றதாகக் கிடைக்கும் புகைப்படங்கள் உண்மையானதா அல்லது தொழில்நுட்ப உதவியுடன் திருத்தப்பட்டதா, பழைய புகைப்படமா என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

நம்மிடம் உள்ள புகைப்படத்தை மேலே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கூகுள் இமேஜில் பதிவேற்றினால், இதற்கு முன்பு அந்தப் படம் வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது ‘போட்டோஷாப்’ செய்யப்பட்டுள்ளதா என்பதை ஓரளவு கண்டுபிடித்துவிடலாம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் முறை என்று இதைச் சொல்லலாம்.

கேரள வெள்ளத்தின்போது மின்துறை ஊழியர்கள் தங்களின் கடமையைச் சிறப்பாகச் செய்தனர் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்தப் படத்தை பதிவேற்றியுள்ளார். இது உண்மையானதா என்பதை அறியாமல் 200க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை மட்டும் நாம் தனியாக கிராப் செய்து கூகுளில் பதிவேற்றித் தேடினால் கீழ்க்கண்ட இடத்தில் இந்தப் புகைப்படம் மேற்கூறப்பட்ட தினத்திற்கு முன்பாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவருகிறது.

அதன் மூலம் இந்தப் படம் கேரள வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை நாம் எளிதாகக் கண்டறிந்து கொள்ளலாம்.

இதேபோல், பெரியார் அரங்கம் கட்ட திகவினர் பூமி பூஜை நடத்தியதைக் காட்டுவதாகப் புகைப்படம் ஒன்று சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்த ஊடகவியலாளர் கே.முரளீதரன், அவை 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது திருப்பூர் அதிமுக நிர்வாகிகள் நடத்திய யாகம் என்றும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். தன் கூற்றுக்கு ஆதாரமாக மேற்கொண்டு இரண்டு புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

முரளீதரன் கூறியவை உண்மையா என கூகுள் ரிவர்ஸ் இமேஜ் முறையில் நாம் சோதித்துப் பார்த்தோம்.

வைரலாகப் பரவிவரும் அந்தப் புகைப்படத்தை கூகுள் இமேஜில் பதிவேற்றித் தேடியபோது, அவர் கூறியவை உண்மைதான் எனத் தெரியவந்தது.

திருப்பூரில் மேயர் தலைமையில் இன்று நடந்த சிறப்பு வழிபாடு என்ற தலைப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 17ஆம் தேதியன்று நமது அம்மா இணையதளம் என்ற இணையப் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் பெரியாருக்கு பூமி பூஜை நடத்தியதாகப் பரப்பப்பட்ட புகைப்படம் போலி எனத் தெரிந்ததோடு அது எப்போது எடுக்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

இதுபோன்ற ஒரு சில எளிய தொழில்நுட்ப முயற்சிகளிலேயே ஒரு புகைப்படம் போலியானதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஒரு புகைப்படத்தைப் பகிர்கிறவர்களின் பின்புலம் என்ன, எந்த நோக்கத்துக்காக அந்தப் புகைப்படம் பகிரப்படுகிறது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் போலியான புகைப்படங்களை அடையாளம் காணலாம்.

செய்திகள் வெள்ளமாகப் பெருகிவரும் இன்றைய நாளில் பொய்க்கும் மெய்க்கும் இடையேயான கோடுகள் மங்கிவருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற கருவிகளும் உத்திகளும் மிகவும் அவசியமாகின்றன. சாதி, மத, தொழில், அரசியல் காரணங்களுக்காகச் செய்திகளோடு விபரீதமாக விளையாடுபவர்கள் அதிகரித்துவருவதால் நமது விழிப்புணர்வும் தற்காப்புத் திறன்களும் அதிகரித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கூகுள் நிறுவனம் எடுத்துள்ள இந்த முனைப்பு பெரிதும் வரவேற்கத்தக்கது.

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon