மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

திருமுருகன் காந்தியைச் சந்தித்த வைகோ

திருமுருகன் காந்தியைச் சந்தித்த வைகோ

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஐநா சபையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரையாற்றினார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து, அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே 2017ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன விடுதலைக்காகப் பேசியதாக திருமுருகன் காந்தி மீது உபா சட்டத்தின் கீழ் (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) நுங்கம்பாக்கம் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதனை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்திக்குச் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மே 17 இயக்கம் தனது முகநூல் பக்கத்தில், “45 நாட்களாக தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 26) திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார். திருமுருகன் காந்தியின் வருகைக்காக வைகோ, காலையிலிருந்தே நீதிமன்றத்தில் காத்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திருமுருகன் காந்தி மீது 30 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். ஜெனீவாவில் இருந்து அவர் வந்த பிறகு 16 வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது, அதில் தேசத் துரோக வழக்காக நான்கு வழக்கு போடப்பட்டுள்ளது. சிறையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவரும் அவருக்கு பிளாஸ்கில் வெந்நீர் வைத்துக்கொள்ள அனுமதி தரவில்லை. நானும் சிறை சென்றிருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட கொடுமைகளைப் பார்த்ததில்லை. திருமுருகன் இருக்கும் இடத்தில் அவரை வேறேந்த கைதியும் பார்க்க முடியாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் கூட சர்வ சாதாரணமாகச் சிறையில் உலவி வருகிறார்கள். ஆனால், திருமுருகன் காந்தியை மட்டும் தனிமை சிறையில் அடைத்து சித்ரவதைப்படுத்துகின்றனர்” என்று விமர்சித்தார்.

“அவரது உயிருக்கு ஆபத்து என்பதால்தான், காலையிலிருந்து இங்கு அமர்ந்திருந்தேன். ஆபரேஷன் பிஎம்ஜியின் அடுத்த கட்டமா இது? திருமுருகன் காந்தி தனிநபர் அல்ல, அவருக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளத்தில் ஆவேசத் தனல் எழுந்துள்ளது. இந்த அரசுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் எச்சரித்தார்.

சிறை செல்லும் முன்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த திருமுருகன் காந்தி, “அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வோம். பாஜக தோற்றுபோகும்” என்று தெரிவித்தார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon