மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

தமிழகத்தின் கல்விக் கொள்கை: நீதிபதி பாராட்டு!

தமிழகத்தின் கல்விக் கொள்கை: நீதிபதி பாராட்டு!

தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நீட் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால், 196 கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தவொரு பொதுத் தேர்வையும் அனுமதிக்கக் கூடாது என்ற மனநிலையில் தமிழக அரசு உள்ளது என வாதிட்டார் மத்திய அரசு வழக்கறிஞர் மனிந்தர் சிங்.

அவரது வாதத்தை ஏற்க நீதிபதி நாகேஸ்வர ராவ் மறுத்துவிட்டார். “பொதுவாக, தமிழக அரசின் செயல்பாட்டை இவ்வாறு கூறுவதை ஏற்க இயலாது. நான் தமிழக வழக்குகளில் நிறைய வாதாடியுள்ளேன். தமிழகத்தின் கல்விக் கொள்கைகள் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று அவர் கூறினார்.

நீட்டை தமிழக அரசு எதிர்க்கக் காரணமே, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் என்று நீதிபதி நாகேஸ்வர ராவ் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரத்தை வரும் அக்டோபர் 9ஆம் தேதியன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon