மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

திமுக கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கூட்டணிகள் பற்றிய யூகங்களும் வியூகங்களும் அரசியல் வட்டாரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட உத்தேச சீட் பட்டியல் தயாராகிவிட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஜெயலலிதா இருந்தவரைக்கும் இதுபோன்ற தேர்தல் பணிகளில் அதிமுகதான் முதலில் இருக்கும். போட்டியிடும் இடங்கள், வேட்பாளர்கள் பட்டியல் போன்றவற்றை அதிரடியாக அறிவிக்கும் ஜெயலலிதா, அதை அதிரடியாக மாற்றவும் செய்வார். இப்போது இந்த இடத்தை திமுக பிடிக்கும் நிலையில் இருக்கிறது என்கிறார்கள்.

திமுக கூட்டணியில் இப்போது காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு இடதுசாரிகள், தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.

திமுக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்ற ஆலோசனை தலைமையில் தொடங்கியபோதே, “நாம் மிக அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூட்டணி தர்மம் என்று சொல்லி பாதி சீட்டுகளை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது” என்று ஸ்டாலினிடம் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். தேர்தல்களத்தில் இதே சிந்தனை ஓட்டத்தைக்கொண்டிருக்கும் ஸ்டாலினும் இதை ஆமோதித்திருக்கிறார்.

இப்போது அறிவாலயத்தில் உத்தேச பட்டியல் ஒன்று தயாராகியிருக்கிறது. அதன்படி திமுக 28 இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளில் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு ஏழு இடங்கள்,(புதுச்சேரியைச் சேர்த்து) இரண்டு இடதுசாரிகளுக்கும் தலா ஒன்று, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேசிய லீக் தலா ஒன்று ஆக மொத்தம் 40 இடங்கள்.

இதுபற்றி திமுக வட்டாரங்களில் பேசினோம்.

“வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே நிலவப் போகிறது. எனவே திமுக அதிக இடங்களில் ஜெயித்து வலுவான கட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் அடுத்த மத்திய அரசில் திமுகவின் பங்கு கணிசமாக இருக்க முடியும். இந்தத் திட்டத்தில்தான் அதிக இடங்களில் போட்டியிட ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார்.

காங்கிரஸைப் பொறுத்தவரை ஏழு இடங்கள் என்பதை இங்குள்ள தலைவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான். ஆனால், காங்கிரஸ் டெல்லி தலைமை, இந்தத் தேர்தலில் எந்த நிலையிலும் திமுகவோடு இருப்பது என்பதில் உறுதியாக இருக்கிறது. ப.சிதம்பரம் கூட ராகுல் காந்தியிடம், திமுகவோடு இருக்கும்பட்சத்தில் நாம் போட்டியிடும் சீட்டுகளில் எல்லாம் ஜெயிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். எனவே காங்கிரஸ் திமுகவோடுதான் இருக்கும்” என்றவர்களிடம்,

“அப்படியெனில் அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்போம் என்றுதான் சொன்னாரே தவிர, காங்கிரஸை மையப்படுத்தி எதுவும் பேசவில்லையே” என்று கேட்டோம்.

“நிச்சயமாக. காங்கிரஸ் கட்சியின் ரஃபேல் ஆர்ப்பாட்டத்தில் கராத்தே தியாகராஜன் திமுகவைக் குறை கூறிப் பேசியபோது கூட, அதுபற்றி யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தடை போட்டார் ஸ்டாலின். காங்கிரஸுக்கும் திமுகவுக்குமான மோதலை அவர் விரும்பவில்லை. அதேநேரம் இப்போதே காங்கிரஸிடம் கையைத் திறந்து காட்டிவிட்டால் கோஷ்டிக்கு இத்தனை சீட் என்று பத்துக்கும் மேற்பட்ட சீட்டுகளைக் கேட்பார்கள். சீட் விவகாரத்தில் கறார் காட்டுவதற்குத்தான் திமுக நிர்வாகிகள் இப்போதே இதுபோல கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள்” என்கிறார்கள்.

திமுக கூட்டணியின் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஒற்றைச் சீட்டுக்கு ஒப்புக்கொள்ளுமா என்பதும் விவாதமாக மாறியிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இந்த விவாதம் தீவிரம் ஆகலாம்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon