மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

குற்றவாளிகளின் புகலிடமா ஆளுநர் மாளிகை?

குற்றவாளிகளின் புகலிடமா ஆளுநர் மாளிகை?

குற்றவாளிகளின் புகலிடமாக ஆளுநர் மாளிகை உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், ஹெச்.ராஜாவுடன் ஆளுநர் பேசியது என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்தது. அக்டோபர் 22ஆம் தேதிக்குள் ஆஜராக ராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வுக்குத் தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிகாரமில்லை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புகளின்படி தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து வழக்கு தொடர முடியும். எனவே சி.டி.செல்வம் அமர்வு வழக்கு தொடர முடியாது என ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஹெச்.ராஜா நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்கும் முறையில் பேசியும், செயல்பட்டும் வருகின்ற பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா காவல் துறையால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் தமிழகக் காவல் துறையின் முழு பாதுகாப்புடன் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பகிரங்கமாக எவ்வித அச்சமின்றி தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காவல் துறையால் தேடப்பட்டு வரும் ஹெச்.ராஜா கடந்த 25ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அரை மணி நேரம் பேசியிருப்பது பல்வேறு வினாக்களை எழுப்புகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளின் புகலிடமாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டதா என வினா எழுப்பியுள்ள முத்தரசன், “தமிழக காவல் துறையால் தேடப்பட்ட குற்றவாளி எஸ்.வி.சேகர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் வலம் வருகிறார். தற்போது ஹெச்.ராஜா ஆளுநரைச் சந்தித்து உரையாடி வருகிறார்.

ஹெச்.ராஜாவிடம் பேசப்பட்ட விவரம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு ஆளுநர் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“பாஜகவில் அங்கம் வகித்தால் எத்தகைய தீங்கான, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அத்தகைய நபர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதை ஹெச்.ராஜா - ஆளுநர் சந்திப்பு அம்பலப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ள அவர், சட்டம் ஒழுங்கு என்பது தமிழக அரசின் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பது இச்சம்பவங்களின் மூலம் தெள்ளத் தெளிவாக வெளிப்படுவதாகவும் கூறியுள்ளார்.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon