மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சிபிஎஸ்இ: கணிதத்தில் இரட்டை வினாத்தாள்!

சிபிஎஸ்இ: கணிதத்தில் இரட்டை வினாத்தாள்!

வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வில், இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் உயர்கல்வியைக் கருத்தில் கொண்டு இந்த புதிய மாற்றத்தைக் கொண்டுவருவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்வின்போது, கணக்குத் தேர்வில் இரட்டை வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் ஏதாவது ஒரு வினாத்தாளை, மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஒரு வினாத்தாளில் வழக்கமான கேள்விகளும், மற்றொரு வினாத்தாளில் கடினமான கேள்விகளும் இடம்பெறும் எனவும், மாணவர்கள் தாங்கள் விரும்பும் வினாத்தாளைக் கொண்டு தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்குப் பின், மேல்நிலைக் கல்வியில் சேர விரும்பும் பிரிவுக்கு ஏற்றவாறு கேள்வித்தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை, விண்ணப்பத்தின்போதே தெரிவிக்க வேண்டுமென்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

இரண்டு வகையான வினாத்தாள்களைத் தயார் செய்வதற்காக, 15 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கணித நிபுணர்கள், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலைச் சேர்ந்த ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த முறையானது, இந்த ஆண்டு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வின்போதும் இதேபோன்று வினாத்தாள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது சிபிஎஸ்இ.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon