மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

தற்காலிக முதுகலை ஆசிரியர்கள்: அரசு அனுமதி!

தற்காலிக முதுகலை ஆசிரியர்கள்: அரசு அனுமதி!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு 1,474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

“தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர் பணி என்பது இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சிறப்பாசிரியர்கள்; மற்றொன்று பகுதி நேர ஆசிரியர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர்கள் 16, 500பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மூலம், முதல்கட்டமாக இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,000 வழங்கப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். அதுவும், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அவர்களுக்குப் பாடம் எடுக்க வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில், இதற்கு மத்திய அரசு நிதி தருகிறது. இவர்களைப் பணியில் அமர்த்தும்போது பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறித்தான், 8 ஆண்டுகளுக்கு முன்னர் பணி வழங்கப்பட்டது. தற்போது உள்ள நிதி நிலையின்அடிப்படையில், பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. போராட்டம் நடத்துபவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போதுள்ள நிலையை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

11, 12ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்துவதற்காக, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்துக்கொள்ளலாம். புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும்” என்று இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon