மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும்!

அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும்!

அமைச்சர்கள் பேசுவது விமர்சனத்திற்குரியதாக மாறுவதால் அவர்கள் பொறுப்புணர்ந்து பேச வேண்டுமென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 17ஆம் தேதி புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கலைஞரின் சமாதிக்கு மெரினா கடற்கரையில் இடம் கொடுத்தது அதிமுக அளித்த பிச்சை”என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல நேற்று முன்தினம் “அதிமுக அரசு குறித்து பேசினால் நாக்கை அறுப்போம்” என அமைச்சர் துரைகண்ணு பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே தமிழக அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டுமென பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (செப்டம்பர் 27) செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “அமைச்சர்களாக இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அவர்களது பேச்சுக்கள் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவருகிறது” என்றவர், அதிமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சரித்திர முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சாதாரண மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடிய அட்டையாக ஆதார் அட்டை இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மத்திய அரசு மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு இது பதிலாக அமைந்திருக்கிறது” என்றவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசு குறைந்தபட்சம் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon