மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சர்க்கரை உற்பத்தித் துறைக்கு நிதியுதவி!

சர்க்கரை உற்பத்தித் துறைக்கு நிதியுதவி!

சர்க்கரை உற்பத்தித் துறையினருக்கு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “ஏற்றுமதி செய்யும் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.4,500 கோடி தொகுப்பு நிதி வழங்க ஒன்றிய அரசு முன்வந்துள்ளது. கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கணக்கிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2018-19ஆம் ஆண்டில் 5 மில்லியன் டன் வரையிலான சர்க்கரை ஏற்றுமதியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஆலைகளுக்குச் சர்க்கரை குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாயும், துறைமுகப் பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும் ஆலைகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும், துறைமுகம் இல்லாத மற்ற மாநிலங்களுக்கு ரூ.3,500 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்” என்றார்.

அண்மையில் உணவுத் துறையின் பரிந்துரைப்படி, சர்க்கரை இருப்பை நிவர்த்தி செய்ய, ரூ.13,000 கோடி நிதி வழங்கப் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்தது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகையை வழங்குவதற்காக இந்த நிதி அளிக்கப்பட்டது. சில மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல் வரவிருப்பதாலும், 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரவிருப்பதாலும் விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் விதமாக இந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

2017-18ஆம் ஆண்டில் சுமார் 32 மில்லியன் டன் அளவுக்குச் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் சுமார் 10 மில்லியன் டன் சர்க்கரை இருப்பில் இருக்கும் என்றும் சந்தை வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon