மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

`உலக சாதனை’யால் வெளியேற்றப்பட்ட வீரர்!

`உலக சாதனை’யால் வெளியேற்றப்பட்ட வீரர்!

ஆசியக் கோப்பையில் அடைந்த படுதோல்வியின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி அதிரடியான பல மாற்றங்களை முன்னெடுத்துள்ளது. முதலில் தோல்வியின் முழுப் பொறுப்பையும் அணியின் கேப்டன் அஞ்சலோ மேத்யூஸ் மீது சுமத்தி அவரைப் பதவி விலகச் செய்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரை அதிரடியாக நீக்கியுள்ளது.

இங்கிலாந்து அணி அடுத்தமாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள், 1 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று (செப்டம்பர் 26) அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தற்போது மேத்யூஸை நீக்கிய இலங்கை கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் அணியில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை அணியில் புதிய கேப்டனாக தினேஷ் சந்திமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உடற்தகுதியைக் காரணம் காட்டி மேத்யூஸை ஒருநாள் தொடரில் நீக்கியதற்கு வினோதமான காரணம் ஒன்றை இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. "மேத்யூஸின் கிரிக்கெட் பயணத்தில் அவர் களத்தில் ஆடிக்கொண்டிருக்கையில் இதுவரை 64 ரன்-அவுட்கள் நடந்துள்ளன. அதில் 49 முறை அவர் எதிர்முனையில் உள்ள ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது ஒரு உலக சாதனை" என்று அந்த அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்கா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேப்டன் பதவியிலிருந்து விலகிய மேத்யூஸ், "இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்க நான் தயார். ஆனால் என்னை மட்டுமே காரணமாக கூறுவது சரியல்ல. இது தேர்வுக் குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் இணைந்து எடுத்த முடிவுதான் என்றாலும் தோல்விக்கு கேப்டனை மட்டும் காரணமாக்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் எனது அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவை மதித்து அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.

இலங்கை அணி விவரம்

டெஸ்ட் தொடர்

தினேஷ் சந்திமல்(கேப்டன்), திமுத் கருணாரத்னே, குஷல் சில்வா, குஷல் மெண்டிஸ், அஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சயா டி சில்வா, ரோஷன் சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கனா ஹெராத், மலிண்டா புஷ்பகுமாரா, அகிலா தனஞ்சயா, சுரங்கா களமல், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, லக்ஷன் சண்டகன், நிரோஷன் டிக்வெல்லா.

ஒருநாள் தொடர்

தினேஷ் சந்திமல்(கேப்டன்), உபுல் தரங்கா, சதிரா சமரவிக்ரமா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்சயா டி சில்வா, தாசன் ஷனகா, திசரா பெரேரா, அகிலா தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா, லசித் மலிங்கா, அபோன்சோ, லக்ஷன் சண்டகன், நுவான் பிரதீப், கசுன் ரஜிதா, குஷல் ஜனித் பெரேரா.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon