மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

ஸ்டாலின் ஆசையை அரசு நிறைவேற்றும்: அமைச்சர்!

ஸ்டாலின் ஆசையை அரசு நிறைவேற்றும்: அமைச்சர்!

“தன் மீது முடிந்தால் வழக்கு போடுங்கள் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். அவரது ஆசையை அரசு நிறைவேற்றும்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சி.பா. ஆதித்தனாரின் 114ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையிலுள்ள அவரது சிலைக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (செப்டம்பர் 27)மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” திமுகவுக்கு அரசியல் பண்பாடு, நாகரீகம் ஆகியவை கிடையாது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற வெறுப்போடு செயல்படுகின்றனர். திமுக ஆட்சியில் இருந்தபோது அரசு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பெயர் எங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்வதும் கலந்துகொள்ளாததும் அவரது விருப்பம்.

தன் மீது முடிந்தால் வழக்கு போடட்டும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். அவரது ஆசை அதுவாக இருந்தால், நிச்சயம் இந்த அரசு பூர்த்தி செய்யும். அதை ஸ்டாலின் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஊழலின் மொத்த உருவமே திமுகதான். தங்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு அரசை விமர்சிக்கத் தேவையில்லை.

அதிமுகவினர் நாவடக்கத்துடன் தான் உள்ளனர். துரைகண்ணனின் பேச்சு வாய்தவறி கூறியதாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

அதிமுக கண்டன பொதுக்கூட்டத்தில் குத்துப்பாடல்கள், ஆபாச நடனம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “ சினிமாவில் நல்ல கருத்துக்களை பரப்பும் வேலையைத் தயாரிப்பாளரும் இயக்குநரும் செய்ய வேண்டும். பல்வேறு நல்ல விசயங்களை திரைப்படம் மூலம் எம்ஜிஆர் கூறியுள்ளார். குத்துப்பாடல்கள் குறைந்து அதுபோன்ற நல்ல கருத்துகள் சினிமாவில் அதிகரிக்கட்டும்” என்று பதிலளித்தார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon