மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

2 வழக்குகளில் கருணாஸ் மீண்டும் கைது!

 2 வழக்குகளில் கருணாஸ் மீண்டும் கைது!

முதல்வரை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ கருணாஸ், மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், முதல்வரையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர், கடந்த 23ஆம் தேதி அவரை கைது செய்தனர். வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கருணாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே கருணாஸ் தரப்பிலிருந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை தரப்பிலிருந்தும் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், காவல் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்றம், கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தது. இந்த சூழ்நிலையில் கருணாஸ் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஐபிஎல் போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ரசிகர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில்தான் வேலூர் சிறையில் கருணாஸை நேற்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon