மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

இந்தியப் பயணிகள் மீது துபாய் நம்பிக்கை!

இந்தியப் பயணிகள் மீது துபாய் நம்பிக்கை!

இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 2.2 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று துபாய் சுற்றுலாத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான துபாய், சிறந்த சுற்றுலா தளமாகும். உலகம் முழுவதிலும் இருந்து துபாய்க்கு சுற்றுலாப் பயணிகள் தங்களது விடுமுறைக் காலங்களிலும் இதர நாட்களிலும் வந்து செல்கின்றனர். துபாயின் சுற்றுலா வாயிலான வருவாயில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு உண்டு. இந்த ஆண்டின் ஜூலை மாதம் வரையில் இந்தியாவிலிருந்து 12 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது சென்ற ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான வருகையை விட 2.2 சதவிகிதம் அதிகம் எனவும் துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தைப்படுத்துதல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தைப்படுத்துதல் அமைப்பின் தலைமைச் செயலதிகாரியான இஸ்ஸாம் அப்துல் ரஹிம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து மொத்தம் 20 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது துபாய்க்கு சுற்றுலா வரும் ஒரு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சிறப்பாக இருந்துள்ளது. இதே வளர்ச்சி இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சாலையோரக் கண்காட்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

துபாய்க்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் நாட்டவர்களில் இந்தியாவைத் தொடர்ந்து சவுதி அரேபியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon