மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பாமக போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பாமக போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அக்டோபர் 5ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.86.28ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து ரூ.78.49 ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 27)அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 43 நாட்களில் பெட்ரோல் விலை 40 முறை ரூ.6.14 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 43 நாட்களில் 35 முறை ரூ.5.90 உயர்த்தப்பட்டு ரூ.78.49 என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21.00 ரூபாயும், டீசல் விலை 21.61 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ 100 டாலர் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அளவிலான வரி விகிதமும், ரூபாய் பணமதிப்பும் தொடர்ந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 என்ற அளவுக்கு அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் விருப்பம் போல பயணிப்பதற்கான மாதந்திர பயணக் கட்டண அட்டையின் விலை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக, அதாவது 30சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.89, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.70 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.30.07, டீசல் விற்கப்பட்டால் ரூ.22.17 வரியாகக் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.470 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது ரூ.600 கோடியாக அதிகரிக்கும். நடப்பாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூ.4000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனும் போது அதை விட்டுக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5.00 வரை குறைக்க முடியும். ஆனால், அதைச் செய்ய தமிழக அரசு தயாராக இல்லை.

மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5ஆம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon