மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

இரட்டை நாயகிகள் சென்டிமென்ட்!

இரட்டை நாயகிகள் சென்டிமென்ட்!

சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதன்முறையாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் வெளியான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகிவருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர். இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும் ப்ரனிதாவின் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசாவும் நடிக்கவுள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு இன்று நாடு திரும்புகிறது. அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கேத்ரின் தெரசா இணையவுள்ளார். சிம்புவுடன் முதன்முறையாக இணைந்தாலும் கேத்ரின் சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கெனவே கலகலப்பு 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர நீயா 2 படத்திலும் கேத்ரின் தெரசா நடித்துவருகிறார்.

சிம்பு, சுந்தர் சி இருவருமே இப்படத்தை விரைவில் முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிம்பு நடிப்பில் செக்கச் சிவந்த வானம் இன்று வெளியாகி கவனம் பெற்றுவரும் நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். சுந்தர் சி அடுத்ததாக விஷாலைக் கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படத்திலும் தமன்னா, ஐஸ்வர்யா லெட்சுமி என இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

சமீபகாலமாக சுந்தர் சி இயக்கும் பெரும்பாலான படங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகிகளே நடிக்கின்றனர். கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த பட்டியலில் பெயரிடப்படாத இந்த இரண்டு படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon