மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

பெட்ரோ மண்டலத்தினால் பாதிப்பு: அரசுக்கு உத்தரவு!

பெட்ரோ மண்டலத்தினால் பாதிப்பு: அரசுக்கு உத்தரவு!

நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அமைத்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கடற்கரையோர மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. “தமிழகத்தில் நாகை, கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை உள்ளடக்கிய இடத்தை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

இதனால் அப்பகுதியில் உள்ள இயற்கை வளம், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். இது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவித்துப் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தன. ஆனால், தமிழில் இடம்பெறவில்லை. இதனால், அந்தத் திட்டம் குறித்தோ, அதற்கான இழப்பீடு பெறுவது குறித்தோ, அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் கோரியிருந்தார் சுந்தர்ராஜன்.

நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு, இந்த மனு இன்று (செப்டம்பர் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் அக்டோபர் 3ஆம் தேதியன்று பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon