மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை!

ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராகப் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். அதிலிருந்து கட்சியின் புத்தாக்கப் பணிகளில் ஈடுபட்டும், தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்ற கலைஞரின் புகழஞ்சலி கூட்டங்களிலும் கலந்துகொண்டும் வந்தார். தொடர்ச்சியான பயணங்களில் இருந்த அவர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறி காரசாரமான அறிக்கைகளையும் வெளியிட்டுவருகிறார்.

இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் தொற்றின் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதற்கிடையே அவருக்கு இன்று

(செப்டம்பர் 27) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வலது தொடையில் இருந்த நீர்க்கட்டி, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்புவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் ஸ்டாலின் வீடு திரும்பவுள்ளதால், தொண்டர்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உள்பட யாரும் அங்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்டாலின் கண்புரை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகோ நலம் விசாரிப்பு

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சாதாரண மருத்துவப் பரிசோதனைக்காக அவர் இங்கு வந்திருக்கிறார். தற்போது முழு நலமுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரைச் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடிவிட்டு, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துவிட்டு வருகிறேன். விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon